Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 மே (ஹி.ச.)
போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத மது விற்பனை மற்றும் திட்டமிட்ட சைபர் மோசடிகளை ஒழிப்பதற்காக தாம்பரம் மாநகர காவல் துறையினர் தீவிர சோதனைகளையும், அமலாக்க நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக, கடந்த மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் பல்வேறு இடங்களில் அதிரடி சிறப்புச் சோதனைகள் நடத்தப்பட்டன. ரகசியத் தகவலின் அடிப்படையில் நடந்த இந்த சோதனையில், 21 கிலோ கஞ்சா மற்றும் 1,900 டாபென்டாடோல் (Tapentadol) மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில், பலர் அதிரடியாகக் கைதும் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தாம்பரம் காவல் ஆணையர் சஞ்சய் குமார் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் எந்த ஒரு சட்டவிரோத செயல்கள் எந்த காரணத்தைக் கொண்டும் பொறுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கஞ்சா மற்றும் இதர போதைப்பொருட்களை சட்டவிரோதமாகக் கடத்துதல், விற்பனை செய்தல், அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து மதுபானக் கூடங்களில் (பார்) மது அருந்துதல், பொது இடங்களிலும், மதுபானக் கூடங்களின் முன்பும் மது அருந்துதல், சட்டத்திற்கு புறம்பாக சில்லறையாக மது விற்பனை செய்தல், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் செயல்களில் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர் என அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தாம்பரம் காவல் ஆணையர் சஞ்சய்குமார் எச்சரித்துள்ளார்.
மேலும் அறிக்கையில், சைபர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசாரும் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், புது பெருங்களத்தூரைச் சேர்ந்த ஒருவரிடம், காப்பீட்டு முகவர்கள் போல நடித்து ரூ.15 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்ததாகப் புகார் பெறப்பட்டது.
இதுகுறித்து சைபர் கிரைம் பிரிவினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், செல்போன் கோபுர சிக்னல்களை ஆய்வு செய்தபோது, கிண்டியில் உள்ள ஆர்.கே. டவர்ஸில் இயங்கி வந்த ஒரு தனியார் அலுவலகத்திலிருந்து இந்த மோசடி அரங்கேறியது கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், மோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து செல்போன்கள், கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் பல சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
எனவே, பொதுமக்கள் யாரும் போலியான காப்பீட்டு அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். எதிலாவது முதலீடு செய்வதற்கு முன் அந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மையை முழுமையாகச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN