Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 17 மே (ஹி.ச.)
தூத்துக்குடி மக்களைப் பொதுவெளியில் குற்றம் சாட்டுவதையோ, அவர்களின் ஜனநாயக உரிமையைக் கொச்சைப் படுத்துவதையோ எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தூத்துக்குடி தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நேற்று சமூக வலைதளங்களில் முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சகோதரி திருமதி கீதா ஜீவன் அவர்களின் பதிவு ஒன்றைக் கண்டேன். அதில், தூத்துக்குடி மக்களுக்கு ஏதோ அரசியல் சிந்தனையே இல்லாதது போலவும், மக்களெல்லாம் முட்டாள்கள் என்பது போலவும் அவர் சித்தரித்துள்ளார்.
தான் செய்த பணிக்கு மக்கள் தனக்கு வாக்கு அளிக்கவில்லை என அவர் விரக்தியின் உச்சத்தில் புலம்பி இருப்பதைப் பார்த்து நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். இரண்டு முறை தமிழக அமைச்சராக இருந்த ஒரு பொறுப்பான சகோதரி, பொதுவெளியில் வாக்களித்த சொந்த மக்களையே குற்றம் சாட்டுவது கண்டிக்கத்தக்கது.
ஜனநாயகம் என்பது மக்கள் தங்களுக்கு யாரை விரும்புகிறார்களோ, அவர்களைத் தேர்ந்தெடுக்கும் முழுமையான உரிமையைக் கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் தான் தூத்துக்குடி மக்கள் என்னைத் தங்களது சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட ஜனநாயகப்படி என்ன தகுதி வேண்டுமோ, அத்தனை தகுதிகளும் என்னிடம் இருக்கிறது; அதனால்தான் மக்கள் எனக்கு இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர்.
ஆனால், எனது திறமை என்ன, மக்கள் நலனில் எனது பணி என்ன என்பதை இன்னும் அளவிடக் கூடத் தொடங்காமல், போகிற போக்கில் சேற்றை வாரி இறைப்பது போல் மக்கள் மீதும், என் மீதும் குற்றச்சாட்டைச் சுமத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்
மீண்டும் சகோதரி கீதா ஜீவன் அவர்களையே மக்கள் தேர்ந்தெடுப்பார்கள், அதன் மூலம் தனக்கு வேண்டிய காரியங்களைச் செய்துகொள்ளலாம் என்று நினைத்திருந்த சில சக்திகளுக்குத் தூத்துக்குடி மக்களின் இந்தத் தீர்ப்பு மிகப்பெரிய அதிர்ச்சியைத் தந்துள்ளது. மக்களின் இந்த நம்பிக்கையை வீணடிக்காமல், தூத்துக்குடி தொகுதிக்குரிய மக்கள் பணிகளைச் மிகச் சிறப்பாகச் செய்து அதை நான் களத்தில் நிரூபிப்பேன் என்பதைத் தெளிவாகக் கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
இருப்பினும், அன்புச் சகோதரி திருமதி கீதா ஜீவன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b