Enter your Email Address to subscribe to our newsletters

திருத்தணி, 17 மே (ஹி.ச.)
அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலின் அடிவாரத்தில் அமைந்துள்ள சரவணப்பொய்கை குளம் பராமரிப்பு இல்லாமல் மாசடைந்துள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குளத்தில் உள்ள நீர் பாசி படர்ந்து துர்நாற்றம் வீசுவதால், அங்கு செல்லவே பக்தர்கள் தயக்கம் காட்டும் நிலை உருவாகியுள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றிய பிறகு, குறிப்பாக மொட்டை அடித்தவர்கள் இந்தக் குளத்தில் நீராடுவது நீண்டகால மரபாக இருந்து வருகிறது.
ஆனால் தற்போது குளத்தின் மோசமான நிலை காரணமாக, பலர் மாற்று இடங்களில் பணம் செலுத்தி குளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புராண முக்கியத்துவம் வாய்ந்த இந்த சரவணப்பொய்கையைச் சுற்றி 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் 27 படிக்கட்டுகள் அமைந்துள்ளன. மேலும், இக்குள நீரில் மருத்துவ குணம் கொண்ட தாதுக்கள் உள்ளன என்ற நம்பிக்கையும் பக்தர்களிடையே நிலவுகிறது.
முன்னர் கோவில் நிதியிலிருந்து பல லட்சம் ரூபாய் செலவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நிலையில், தொடர்ந்து பராமரிப்பு செய்யப்படாததே தற்போதைய பாதிப்புக்குக் காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக தலையிட்டு குளத்தை சுத்தம் செய்து, பழைய நீரை வெளியேற்றி புதிய நீரை நிரப்ப வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், எதிர்காலத்தில் குளம் தூய்மையாக இருக்க நிரந்தர பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P