அதிமுக மற்றும் அம்மாவின் தொண்டர்களை தவெக அழிக்க பார்க்கிறது - டிடிவி தினகரன்
திருச்சி, 17 மே (ஹி.ச.) அம்மாவின் ஆட்சி மீண்டும் அமைய வேண்டுமெனில், அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும். மனக்கசப்புகள் இருந்தால் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தின
TTV Dhinakaran


திருச்சி, 17 மே (ஹி.ச.)

அம்மாவின் ஆட்சி மீண்டும் அமைய வேண்டுமெனில், அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும்.

மனக்கசப்புகள் இருந்தால் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

புரட்சித்தலைவி அம்மா உருவாக்கிய இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது. அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைப்பதற்காக நாங்கள் எந்த நிலையிலும் பின்வாங்கப் போவதில்லை என்றார்.

தமிழக வெற்றிக் கழகம் குறித்து அவர் கூறுகையில்,

தமிழக வெற்றிக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அம்மாவின் தொண்டர்களின் வலிமையை பலவீனப்படுத்த முயற்சி செய்கிறது. ஆனால் அந்த முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என்று குற்றம்சாட்டினார்.

சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு ஆதரவு அளித்த அதிமுகவைச் சேர்ந்த 25 சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்து பேசுகையில்,

மக்கள் எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்பதற்காக வாக்களித்த உறுப்பினர்கள் ஆளும் தரப்புக்கு ஆதரவு அளிப்பது தர்மத்திற்கு எதிரானது. 25 பேரும் என் நண்பர்கள் தான்.

அவர்கள் சட்டத்தையும் அரசியலையும் நன்கு அறிந்தவர்கள்.

அவசரத்தில் எடுத்த முடிவுகள் பின்னர் அவர்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றார்.

மேலும், எங்களது சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசி அழைத்துச் சென்றுள்ளனர். இது குதிரைப் பேரத்துக்கு ஒப்பானது.

இந்த விவகாரம் குறித்து தேவையானால் மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணை கோரப்படும் என்றும் தெரிவித்தார்.

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி விவகாரம் குறித்து அவர் கூறுகையில்,

கட்சித் தலைமையே சட்டமன்றக் குழுவை வழிநடத்தும். கட்சியால் நியமிக்கப்பட்ட கொறடாவே செல்லுபடியாகும்.

இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தெளிவு உள்ளது என்றார்.

மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) போன்ற கட்சிகள் இந்த ஆட்சிக்கு எவ்வளவு காலம் ஆதரவு அளிப்பார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

தற்போதைய அரசின் நிலைத்தன்மை தொடர்ந்து ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்று விமர்சித்தார்.

தமிழ்நாட்டில் மக்கள் ஒரே கட்சிக்கு தெளிவான பெரும்பான்மை வழங்கினால்தான் மாநிலத்திற்கும் மக்களுக்கும் நிலையான நிர்வாகம் கிடைக்கும்.

சமூக வலைத்தளங்களிலும் காணொளி பதிவுகளிலும் மட்டும் ஆட்சி நடத்த முடியாது.

மக்களின் அன்றாட பிரச்சினைகளை நேரில் தீர்ப்பதே நல்லாட்சியின் அடையாளம்.

இவ்வாறு டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN