காரில் இருந்து ரூ.2.56 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் - குஜராத் போலீசார் அதிரடி
தாஹோத், 17 மே (ஹி.ச.) குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டம், லிம்கேடா பகுதியில் உள்ள தன்பூர் சௌக்கடி அருகே இன்று காலை வழக்கமான வாகனச் சோதனையின்போது, கார் ஒன்றில் இருந்து கணக்கில் வராத ரூ.2.56 கோடிக்கும் அதிகமான ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்
Unaccounted Cash Worth ₹2.56 Crore Seized from Car


தாஹோத், 17 மே (ஹி.ச.)

குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டம், லிம்கேடா பகுதியில் உள்ள தன்பூர் சௌக்கடி அருகே இன்று காலை வழக்கமான வாகனச் சோதனையின்போது, கார் ஒன்றில் இருந்து கணக்கில் வராத ரூ.2.56 கோடிக்கும் அதிகமான ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இது தொடர்பாக லிம்கேடா போலீசார் நடத்திய சோதனையில் சந்தேகத்திற்கிடமான கார் ஒன்று நிறுத்தப்பட்டது. காரை சோதனையிட்டபோது, உள்ளே மூன்று மர்ம பார்சல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீஸ் ஆய்வாளர்கள் முன்னிலையில் பார்சல்கள் திறந்து பார்க்கப்பட்டதில், அவற்றில் இந்திய ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன. மொத்தமாக எண்ணப்பட்டதில் ரூ.2,56,80,500 ரொக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், இந்த பணம் தாஹோதில் உள்ள அங்காடியா நிறுவனத்திலிருந்து வதோதராவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. காரின் ஓட்டுநரான ராஜூபாய் நினாமா என்பவரிடம் விசாரித்தபோது, இவ்வளவு பெரிய தொகைக்கான எந்தவித சட்டப்பூர்வ ஆவணங்களையும் அவரால் சமர்ப்பிக்க முடியவில்லை.

விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலத்தில், தாஹோதைச் சேர்ந்த பரத் சோப்ரா என்பவர் இந்தப் பணத்தை வதோதராவில் ஒப்படைக்குமாறு தன்னிடம் கொடுத்ததாக ஒப்புக்கொண்டார்.

அங்காடியா நிறுவனங்கள் பொதுவாக வைரம், நகை மற்றும் பெரிய தொகைகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் தனியார் கூரியர் சேவையாக செயல்படுகின்றன.

இதையடுத்து லிம்கேடா போலீசார், பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் மொத்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.56 கோடி ரொக்கம் உடனடியாக அரசு கருவூலத்தில் டெபாசிட் செய்யப்பட்டது.

மேலும், இந்த சம்பவம் குறித்து காவல் நிலைய நாட்குறிப்பில் பதிவு செய்யப்பட்டு, வருமான வரித் துறைக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கில் வராத இந்த பெரும் தொகையாருக்கு செல்லவிருந்தது என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்த உள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b