எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் - சேலத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!
சேலம், 18 மே (ஹி.ச.) தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் எஸ். பி வேலுமணி, சி.வி சண்முகம், விஜயபாஸ்கர் தலைமையில் ஒரு அணி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பிரிந்துள்ளனர். இவர்க
Posters


சேலம், 18 மே (ஹி.ச.)

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் எஸ். பி வேலுமணி, சி.வி சண்முகம், விஜயபாஸ்கர் தலைமையில் ஒரு அணி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பிரிந்துள்ளனர்.

இவர்கள் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் தவெகவிற்கு ஆதரவு 144 என்று உயர்ந்தது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் வெற்றி பெற்றார்.

ஆனால் அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் ஆதரவு தெரிவிக்கக்கூடாது என்று கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருந்தார்.

இருப்பினும், முந்தைய நாளே விஜய்க்கு ஆதரவு அளிக்க முடிவெடுத்திருப்பதாக, சி.வி சண்முகம், எஸ்.பி வேலுமணி தரப்பு கூறியிருந்தனர்.

அதன்படியே, சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுகவைச் சேர்ந்த 25 சட்டமன்ற உறுப்பினர்கள் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதனால் கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டதாக அவர்களை எம்எல்ஏ பதிவில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என எடப்பாடி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அதிமுக தலைவர்கள் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 5 தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என நோட்டீஸ் அச்சிடப்பட்டு அவரது குடியிருப்பு பகுதி அமைந்துள்ள நெடுஞ்சாலை நகர் சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன.

அந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பே, கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் தற்போது மீண்டும் மற்றொரு போஸ்டரை அச்சடித்து சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டியுள்ளார்.

அதில், கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம். நான்கு முறை தொடர் தோல்வி கண்ட எடப்பாடி பழனிசாமி பதவியில் இருந்து விலகி விடு; இல்லை என்றால்?..”என எச்சரிக்கை வாசகம் இடம்பெற்றுள்ளது.

இவர் கட்சியின் மூத்த உறுப்பினர் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்திலேயே தொடர்ந்து அவருக்கு எதிரான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN