Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 மே (ஹி.ச.)
இஸ்லாமியர்களின் புனிதத் திருநாள் பண்டிகைகளில் பக்ரீத் பண்டிகையும் ஒன்று. ஹஜ் பெருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமிய இறைத் தூதர் இப்ராஹிம் நபியின் தியாகத்தைக் குறிக்கும் வகையில் இந்தப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நாளில் இஸ்லாமியப் பெருமக்கள் புத்தாடை அணிந்து, சிறப்புத் தொழுகை நடத்தி குர்பானி கொடுப்பது வழக்கம். ஏழை, எளிய மக்கள், நண்பர்களுக்கு அசைவ உணவு சமைத்து முஸ்லிம் மக்கள் வழங்குவார்கள். பிறை தெரிவதன் அடிப்படையிலேயே பக்ரீத் பண்டிகையும் நிச்சயிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் குறித்து தமிழ்நாடு அரசு தலைமை காஜி முஃப்தி உஸ்மான் முகைதீன் பாகவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
மே மாதம் ஞாயிற்றுக்கிழமை 17ஆம் தேதி மாலை துல் ஹஜ் மாதத்துக்கான பிறை தமிழகத்தில் தென்படாததால் இன்ஷா அல்லா மே மாதம் செவ்வாய்க்கிழமை 19ஆம் தேதி அன்று துல் ஹஜ் மாத முதல் பிறை என்று இஸ்லாமிய ஷரியத் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் வரும் 28ஆம் தேதி வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்ரீத் பண்டிகையன்று தமிழ்நாடு அரசு சார்பில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b