கடற்கரை, சுற்றுலா தலங்களில் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு- கிளாண்டர்ஸ் தொற்று எதிரொலியாக தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை எச்சரிக்கை
சென்னை, 18 மே (ஹி.ச.) சென்னை உள்ளிட்ட கடற்கரை பகுதிகள், ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களில் குதிரை சவாரி மேற்கொள்ளும் போது கட்டாய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கு
குதிரை சவாரி


சென்னை, 18 மே (ஹி.ச.)

சென்னை உள்ளிட்ட கடற்கரை பகுதிகள், ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களில் குதிரை சவாரி மேற்கொள்ளும் போது கட்டாய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் குதிரைகளுக்கு “கிளாண்டர்ஸ்” எனப்படும் ஆபத்தான பாக்டீரியா தொற்று பரவியிருப்பது கண்டறியப்பட்ட நிலையில், உடல்நலக்குறைவாக உள்ள குதிரைகளை சவாரிக்கு பயன்படுத்த வேண்டாம் என குதிரை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குதிரைகளுக்கு காய்ச்சல், இருமல், மூக்கில் சளி வடிதல், தோல் புண்கள், சுவாசக்குறைவு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவற்றை சவாரிக்காக பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நோயுற்ற குதிரைகளை தனிமைப்படுத்தி பராமரிக்க வேண்டும், தேவையற்ற குதிரை போக்குவரத்தை தவிர்க்க வேண்டும், குதிரைகள் தங்கும் இடங்கள் மற்றும் பயன்படுத்தப்படும் உபகரணங்களை சுத்தமாக வைத்திருந்து கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்றும் கால்நடை பராமரிப்பு துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் கிளாண்டர்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட குதிரை ஒன்று உயிரிழந்த சம்பவத்தையடுத்து, சென்னை கடற்கரைகள் உள்ளிட்ட பல பகுதிகளில் குதிரை சவாரி தொடர்பாக கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோல், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா மையங்களிலும் குதிரை சவாரி நடத்துபவர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி செயல்பட வேண்டும் என தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam