நிலக்கரி இறக்குமதி முறைகேடு வழக்கு- அகமது புகாரி நிறுவனங்களுக்கு எதிரான ED வழக்குகள் ரத்து
சென்னை, 18 மே (ஹி.ச.) நிலக்கரி இறக்குமதியில் ரூ.487 கோடி முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், தொழிலதிபர் அகமது ஏ.ஆர். புகாரி தொடர்புடைய நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை (ED) பதிவு செய்திருந்த அனைத்து வழக்குகளையும் சென்னை சிபிஐ சிறப்பு நீத
உயர்நீதிமன்றம்


சென்னை, 18 மே (ஹி.ச.)

நிலக்கரி இறக்குமதியில் ரூ.487 கோடி முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், தொழிலதிபர் அகமது ஏ.ஆர். புகாரி தொடர்புடைய நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை (ED) பதிவு செய்திருந்த அனைத்து வழக்குகளையும் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011–12 முதல் 2014–15 வரையிலான காலத்தில் இந்தோனேசியாவில் இருந்து தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து அரசுக்கு ரூ.487 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, கோஸ்டல் எனர்ஜி நிறுவனத்தின் இயக்குநர் அகமது ஏ.ஆர். புகாரி, அவரது நிறுவனம், கோஸ்டல் எனர்ஜென், துபாய் மற்றும் மொரீஷியசில் செயல்பட்ட சில வெளிநாட்டு நிறுவனங்கள் மீது சிபிஐ கடந்த 2018ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.

இந்த மோசடி மூலம் கிடைத்த பணம் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு பரிமாறப்பட்டதாகக் கூறி, அமலாக்கத்துறையும் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதனிடையே, 2022 மார்ச் மாதம் அகமது புகாரி கைது செய்யப்பட்டார்.

ஆனால், தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும், எந்தத் தெளிவான முடிவுக்கும் வர முடியவில்லை என்றும் சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, அகமது புகாரிக்கு எதிரான சிபிஐ வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 2025ஆம் ஆண்டு ரத்து செய்தது. அதனைத் தொடர்ந்து, அதே வழக்கின் அடிப்படையில் தொடரப்பட்ட அமலாக்கத்துறை வழக்கையும் அகமது புகாரி மற்றும் இரண்டு நிறுவனங்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் ரத்து செய்திருந்தது.

இந்நிலையில், மேலும் நான்கு நிறுவனங்களுக்கு எதிராக நிலுவையில் இருந்த அமலாக்கத்துறை வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.ஓம் பிரகாஷ், சிபிஐ மற்றும் ED வழக்குகள் ஏற்கனவே உயர் நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நான்கு நிறுவனங்களுக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்குகளையும் ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P