Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 மே (ஹி.ச.)
சோழப் பேரரசின் செப்பேடுகள், வரலாற்றில் லைடன் செப்பேடுகள்அல்லது ஆனைமங்கலம் செப்பேடுகள் என்று அழைக்கப்படுகின்றன.
11-ஆம் நூற்றாண்டு,முதலாம் ராஜராஜ சோழன் மற்றும் அவரது மகன் முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் இந்தோனேசியாவின் ஸ்ரீவிஜய பேரரசர், தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் சூடாமணி விகாரம் என்ற பௌத்த மடாலயத்தைக் கட்டினார்.
இந்த பௌத்த விகாரத்திற்கு ஆனைமங்கலம் என்ற கிராமத்தின் வரிவருவாயை சோழ மன்னர்கள் கொடையாக அளித்தனர்.
இந்த வரலாற்று ஒப்பந்தத்தை 21 செப்புப் பட்டயங்களில் எழுதி, படத்தில் காட்டியுள்ள ராஜேந்திர சோழனின் அதிகாரப்பூர்வ வெண்கல அரச முத்திரையிட்டுப் பூட்டினர்.
18-ஆம் நூற்றாண்டில்
நாகப்பட்டினத்தில் பௌத்த விகாரத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இந்தச் செப்பேடுகள், பின்வரும் வரலாற்று நிகழ்வுகளால் நெதர்லாந்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.
17-18-ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டின் சோழமண்டலக் கடற்கரைப் பகுதிகள் குறிப்பாக நாகப்பட்டினம், டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தகக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
1712 ல் நெதர்லாந்தைச் சேர்ந்த டச்சு அதிகாரியான புளோரெண்டியஸ் காம்பர் என்பவர் நாகப்பட்டினத்தில் இருந்தபோது, இந்தச் செப்பேடுகளின் வரலாற்று மதிப்பை உணர்ந்து, திருடிச்சென்றார்.
1712-ஆம் ஆண்டு வாக்கில் இந்தச் செப்பேடுகள் மற்றும் முத்திரை இந்தியாவிலிருந்து நெதர்லாந்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.
காம்பர் குடும்பத்தின் தனிப்பட்ட சொத்தாக இவை பல ஆண்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
புளோரெண்டியஸ் காம்பரின் வாரிசுகள், இந்தச் செப்பேடுகளை 1862-ஆம் ஆண்டில் நெதர்லாந்தில் உள்ள புகழ்பெற்ற லைடன் பல்கலைக்கழக நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினர்.
அன்று முதல் இது அங்குள்ள ஆசியப் பிரிவின் நூலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, உலகளவில் லைடன் செப்பேடுகள் என்று புகழ்பெற்றது.
இந்தச் செப்பேடுகளையும் முத்திரையையும் மீட்க தமிழக அரசு மற்றும் இந்திய நடுவண் அரசு கடந்த பல ஆண்டுகளாகப் பல இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.
நெதர்லாந்து அரசு தனது காலனித்துவ காலத்தில் கொண்டு செல்லப்பட்ட கலைப்பொருட்களைத் திருப்பித் தரும் கொள்கையை ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து,மே 15, 2026 அன்று நெதர்லாந்து அரசு இந்த 1000 ஆண்டுகள் பழமையான சோழர் காலச் செப்பேடுகளையும் அரச முத்திரையையும் முறைப்படி இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.
நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர் காலப் பொக்கிஷத்தை நெதர்லாந்து அரசிடமிருந்து முறைப்படி பெற்றுள்ளார்.
இதன் மூலம், திருடப்பட்டு சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு சோழர்களின் இந்த உன்னத அடையாளம் மீண்டும் தாய்மண்ணிற்குத் திரும்பியுள்ளது.
சோழர் வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கப்பல் வடிவ செப்புப்பட்டயங்களின் சோழ அரச முத்திரை இதுவாகும்.
குறிப்பாக, இது முதலாம் ராஜேந்திர சோழனின் கரந்தைச் செப்பேடுகளில் அல்லது திருவாலங்காடு செப்பேடுகளில் காணப்படும் அரச முத்திரையை ஒத்தது.
சோழர்கள் தாங்கள் வென்ற நாடுகளின் சின்னங்களையும் தங்களின் சொந்தச் சின்னத்தையும் ஒரே முத்திரையில் இணைத்து, தங்களின் பேரரசுப் பேராதிக்கத்தை நிலைநாட்டினர்.
அந்த வகையில் இந்த முத்திரையின் வலது பக்கத்தில் அமர்ந்த நிலையில் இருக்கும் புலி, சோழர்களின் முதன்மைச் சின்னமாகும்.
இது சோழர்களின் வீரத்தையும் அதிகாரத்தையும் குறிக்கிறது.
இடது பக்கத்தில் செங்குத்தாக நிற்கும் இரண்டு மீன்கள், பாண்டியர்களை சோழர்கள் போரில் வென்று, அவர்களைத் தங்களுக்குக் கீழ் சிற்றரசர்களாக மாற்றியதைக் குறிக்கிறது.
இந்த முத்திரையின் மேற்பகுதியில் புலி மற்றும் மீன்களுக்கு மேல் ஒரு சிறிய வில் வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது.
இது சேரர்களை வென்றதன் அடையாளமாகும்.
தமிழ்நாட்டின் மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூன்று அரசுகளையும் தன் ஒற்றைக் குடையின் கீழ் கொண்டுவந்த மும்முடிச்சோழன் என்ற பெருமையை இந்த ஒரே முத்திரை பிரகடனப்படுத்துகிறது.
மையச் சின்னங்களைத் தவிர, அரச அதிகாரத்தைக் குறிக்கும் பல ஆன்மீக மற்றும் மங்கலக் குறியீடுகள் இதில் செதுக்கப்பட்டுள்ளன.
முத்திரையின் உச்சியில் மையமாக இருக்கும் குடை, மன்னனின் நீதியான மற்றும் உலகைக் காக்கும் ஆட்சியைக் குறிக்கிறது.
குடையின் இருபுறமும் அரச மரியாதைக்குரிய சாமரங்கள் (விசிறிகள்) வீசப்படுவது போல் செதுக்கப்பட்டுள்ளன.
இருபுறமும் தூண்களைப் போலக் காணப்படும் வடிவங்கள் மங்கல விளக்குகள் ஆகும்.
இது நாட்டின் வெற்றியையும் ஒளியையும் குறிக்கிறது.
முத்திரையைச் சுற்றி வட்ட வடிவில் செதுக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் கிரந்த எழுத்துக்கள் ஆகும்.
இதில் பொதுவாக சமஸ்கிருத மொழியில் வாசகங்கள் எழுதப்பட்டிருக்கிறது.
அகில உலகையும் வென்ற, பரகேசரிவர்மன் அல்லது ராஜகேசரிவர்மன் ஆகிய சோழ சக்கரவர்த்தியின் கட்டளை (சாசனம்) என்ற பொருள் தரும் வாசகம் இதில் பொறிக்கப்பட்டிருக்கிறது.
சோழர் காலத்தில் நிலக்கொடை அல்லது முக்கிய அரச ஆணைகளைச் செப்புப் பட்டயங்களில் எழுதுவார்கள். அந்தப் பட்டயங்கள் அனைத்தும் ஒரு பெரிய வளையத்தில் கோர்க்கப்பட்டு, அந்த வளையம் பிரியாதவாறு இந்த முத்திரையை உருகிய செம்பால் இட்டுப் பூட்டிவிடுவார்கள்.
இந்த முத்திரை இருந்தால் மட்டுமே அது உண்மையான அரச ஆணை என்பதை மக்கள் ஏற்பார்கள்.
இன்றைய காலத்து அரசு முத்திரை மற்றும் கையெழுத்து போன்றது இது.
சோழர்களின் கலைத்திறன், உலோகக் கலை மற்றும் அவர்களின் அரசியல் ஆதிக்கத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் மிக உன்னதமான வரலாற்றுச் சான்று இந்த முத்திரையாகும்.
Hindusthan Samachar / Durai.J