தடையற்ற மின்விநியோகத்திற்கு உள்கட்டமைப்பு பணிகளை விரைவுபடுத்த முதல்வர் விஜய் அறிவுரை
சென்னை, 18 மே (ஹி.ச) தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற எரிசக்தித் துறை ஆய்வுக்கூட்டத்தில், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் மின் உற்பத்தித் திறன், மின் தேவை, மின் விநியோகம்,
Vi


சென்னை, 18 மே (ஹி.ச)

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற எரிசக்தித் துறை ஆய்வுக்கூட்டத்தில், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் மின் உற்பத்தித் திறன், மின் தேவை, மின் விநியோகம், நிதிநிலை மற்றும் எதிர்கால உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், முதலமைச்சர் பதவியேற்றவுடன் முதல் கையொப்பமிட்ட முக்கிய வாக்குறுதியான, 500 யூனிட்டுகளுக்குள் மின் பயன்பாடு கொண்ட அனைத்து வீட்டு மின்இணைப்புகளுக்கும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டம், கடந்த 10.05.2026 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும், வேகமாக வளர்ந்து வரும் மாநகரத் தேவைகள், தொழில் வளர்ச்சி மற்றும் விவசாய உற்பத்தி அதிகரிப்பை கருத்தில் கொண்டு, விவசாயத்திற்கு தடையில்லா மின்சாரம் வழங்கவும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை நிதி மற்றும் தொழில்நுட்ப சவால்கள் இருந்தபோதிலும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

அத்துடன், குறைந்த மின்னழுத்தம் உள்ளிட்ட பொதுமக்கள் எதிர்கொள்ளும் அன்றாட மின்சார பிரச்சினைகளுக்கான காரணங்களை கண்டறிந்து, அவற்றிற்கு தீர்வு காணும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாநிலத்தின் உச்சபட்ச மின் தேவையான 21,326 மெகாவாட் மின்சாரம் எவ்வித மின்தடையும் இன்றி விநியோகம் செய்யப்பட்டதையும், கடந்தகால மின் பயன்பாடு, தற்போதைய மின் உற்பத்தி நிலவரம் மற்றும் தடையற்ற மின்விநியோகத்திற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

மேலும், புதிய துணை மின்நிலையங்கள் அமைத்தல், பழைய மின்கட்டமைப்புகளை நவீனப்படுத்துதல், புதிய மின்கம்பிகள் அமைத்தல் மற்றும் தென் மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்தும் வகையில் “பசுமை மின்வழித்தடம்” திட்டப் பணிகளை விரைவுபடுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கோடை மற்றும் எதிர்வரும் பருவமழைக் காலத்தை முன்னிட்டு, மின் கம்பங்கள், மின் கம்பிகள், மின் விநியோக மின்மாற்றிகள் உள்ளிட்ட அத்தியாவசிய மின் தளவாடங்களின் இருப்பு நிலை குறித்தும் அதிகாரிகள் முன்கூட்டியே விளக்கமளித்தனர்.

Hindusthan Samachar / P YUVARAJ