சுப முகூர்த்த நாட்களால் பூக்கள் விலை உயர்வு – மல்லிகை கிலோ ₹700 வரை விற்பனை
சென்னை, 18 மே (ஹி.ச.) கடந்த மே 15 ஆம் தேதி வைகாசி மாதம் தொடங்கியது. இன்று வைகாசி மாதம் முதல் முகூர்த்த தினம் ஆகும். தமிழகத்தில் சுப முகூர்த்த நாட்கள் தொடங்கியுள்ள நிலையில், திருமணம் உள்ளிட்ட மங்கள நிகழ்ச்சிகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால் பூக்க
Flower Prices Rise Due to Auspicious Occasions


சென்னை, 18 மே (ஹி.ச.)

கடந்த மே 15 ஆம் தேதி வைகாசி மாதம் தொடங்கியது. இன்று வைகாசி மாதம் முதல் முகூர்த்த தினம் ஆகும். தமிழகத்தில் சுப முகூர்த்த நாட்கள் தொடங்கியுள்ள நிலையில், திருமணம் உள்ளிட்ட மங்கள நிகழ்ச்சிகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

கோயம்பேடு மற்றும் கொய்யாத்தோப்பு மொத்த மலர் சந்தைகளில் இன்று காலை நிலவரப்படி, முதல் தர மல்லிகைப்பூ கிலோ ஒன்றுக்கு ₹600 முதல் ₹700 வரை விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த வாரம் ₹350-₹400 ஆக இருந்த மல்லிகையின் விலை, முகூர்த்த நாட்களின் காரணமாக இருமடங்காக உயர்ந்துள்ளது.

அதேபோல், முல்லைப்பூ கிலோ ₹300-க்கும், செவ்வந்திப்பூ கிலோ ₹280 முதல் ₹300 வரையிலும் விற்பனையாகிறது. ரோஜா, சம்பங்கி உள்ளிட்ட மற்ற பூக்களின் விலையும் 20% முதல் 30% வரை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

விலை உயர்வால் பூ விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், திருமண வீட்டார் மற்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த மாதம் அடுத்தடுத்து வரும் சுப முகூர்த்த நாட்கள், வைகாசி மாத திருமண சீசன், மற்றும் கடந்த வாரம் பெய்த மழையால் வரத்து குறைந்தது ஆகியவை விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.

முகூர்த்த நாட்கள் முடிந்த பின்னரே விலை குறைய வாய்ப்புள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, விலை உயர்வை சமாளிக்க பலர் கனகாம்பரம், அரளி போன்ற மாற்றுப் பூக்களை வாங்குவதாகவும் கூறப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b