Enter your Email Address to subscribe to our newsletters

திருமங்கலம், 18 மே (ஹி.ச.)
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வேலைவாய்ப்பு உறுதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றுடன் மாணவர்களின் போராட்டம் 5-வது நாளை எட்டியுள்ளதால் கல்லூரி வளாகத்தில் பதற்றம் நிலவுகிறது.
மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தலைமையிலான அதிகாரிகள் குழு மாணவர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
அப்போது, தற்போதுதான் புதிய நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளதால் மாணவர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்து நிறைவேற்ற கால அவகாசம் தேவை என்று அமைச்சர் நிர்மல் குமார் கேட்டுக்கொண்டார்.
ஆனால், கோரிக்கைகள் குறித்து எழுத்துப்பூர்வமாக எந்த உத்தரவாதமும் அளிக்க அதிகாரிகள் தரப்பு முன்வரவில்லை என்று மாணவர்கள் குற்றம்சாட்டினர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
கடந்த பல ஆண்டுகளாக ஹோமியோபதி பட்டதாரிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை என்றும், பயிற்சி முடித்து வெளியேறும் நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் வேதனை தெரிவித்தனர்.
வெறும் வாய்மொழி உறுதியை நம்பி போராட்டத்தை கைவிட முடியாது என்றும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் தேதியுடன் கூடிய எழுத்துப்பூர்வ உத்தரவாதம் வேண்டும் என்றும் அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஹோமியோபதி மருத்துவர்களை நியமிக்க வேண்டும், ஹோமியோபதி பட்டதாரிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும், கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும், பயிற்சி மருத்துவர்களுக்கான உதவித்தொகையை உயர்த்த வேண்டும் ஆகியவை மாணவர்களின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.
எழுத்துப்பூர்வ உத்தரவாதம் கிடைக்கும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் மற்றும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை தொடரப்போவதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
இதனால் கல்லூரியின் வழக்கமான செயல்பாடுகள் முற்றிலும் முடங்கியுள்ளதுடன், போராட்டம் நீடித்தால் நோயாளிகளுக்கான புறநோயாளிகள் பிரிவு சேவையும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மாணவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு ஹோமியோபதி மருத்துவர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
Hindusthan Samachar / vidya.b