Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 மே (ஹி.ச.)
கோவை மாவட்டம் இருகூர் அருகே 13 வயது சிறுவன் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருகூர் பகுதியைச் சேர்ந்த திவிஸ் என்ற 13 வயது சிறுவன் கடந்த 15ஆம் தேதி முதல் காணாமல் போனதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் மற்றும் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது, சிறுவனின் நண்பர்களாக இருந்த இரு சிறுவர்களிடம் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது, திவிஸ் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், கல்லால் தாக்கி கொலை செய்ததாக அவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து,இருகூர் ரயில்வே பாலம் அருகே கிடந்த திவிஸின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவத்திற்கான காரணம் என்ன, முன்விரோதம் ஏதேனும் இருந்ததா, அல்லது வேறு பின்னணி உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ