கீழடி அகழாய்வில் முழுமையான வட்டப்பானை கண்டுபிடிப்பு -தமிழர் நாகரிகத்துக்கு மேலும் வலுசேர்க்கும் ஆதாரம்!
சிவகங்கை, 18 மே (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 11-ஆம் கட்ட அகழாய்வில், தமிழர்களின் தொன்மையான வரலாறு மற்றும் மேம்பட்ட நகர நாகரிகத்தை எடுத்துக்காட்டும் முக்கியமான கண்டுபிடிப்புகள் வெளியாகியுள்ளன. முற்றிலும் சேதமடையாத முழுமையான
வட்டப்பானை


சிவகங்கை, 18 மே (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 11-ஆம் கட்ட அகழாய்வில், தமிழர்களின் தொன்மையான வரலாறு மற்றும் மேம்பட்ட நகர நாகரிகத்தை எடுத்துக்காட்டும் முக்கியமான கண்டுபிடிப்புகள் வெளியாகியுள்ளன.

முற்றிலும் சேதமடையாத முழுமையான வட்டப்பானை ஒன்று அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த கட்ட அகழாய்வில் தோண்டப்பட்ட 7 குழிகளிலும் தொடர்ந்து பழங்கால செங்கல் கட்டுமானங்கள் கண்டறியப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த கண்டுபிடிப்புகள், சங்ககால தமிழர்களின் கட்டிடக்கலை திறன், நகரமயமான வாழ்க்கை முறை மற்றும் உயர்ந்த வாழ்வியல் பண்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இது தொடர்பாக முன்னாள் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், கீழடியில் நடைபெற்று வரும் 11-ஆம் கட்ட அகழாய்வில் தமிழர் வரலாற்றைப் பறைசாற்றும் வகையில் முற்றிலும் சேதமடையாத முழு வட்டப்பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து செங்கல் கட்டுமானங்களும் வெளிச்சத்துக்கு வருகின்றன.

தமிழர்களின் தொன்மை, மேம்பட்ட நகர நாகரிகம் மற்றும் உன்னதமான வாழ்வியலை உலகிற்கு மீண்டும் ஒருமுறை இந்தக் கண்டுபிடிப்புகள் உரக்கச் சொல்லும் என பதிவிட்டுள்ளார்.

கீழடி அகழாய்வு கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் கவனம் பெற்றுவரும் நிலையில், புதிய கண்டுபிடிப்புகள் தமிழர் நாகரிகத்தின் தொன்மை குறித்து மேலும் பல ஆய்வுகளுக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

Hindusthan Samachar / VINOTH KUMAR P