மாற்றுத் திறனாளி பெண்ணிடம் அத்துமீறல் - 2 பேரிடம் போலீஸ் விசாரணை
புதுக்கோட்டை, 18 மே (ஹி.ச.) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வேலை முடித்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளி பெண்ணிடம் காரில் அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுத
Malaiyur Police Station


புதுக்கோட்டை, 18 மே (ஹி.ச.)

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வேலை முடித்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளி பெண்ணிடம் காரில் அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக இரு நபர்களிடம் மழையூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட 35 வயதுடைய பெண், ஆலங்குடி அருகே உள்ள ஒரு அரிசி ஆலையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று வேலை முடிந்த பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது, அவருக்கு அறிமுகமான இரு நபர்கள் காரில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் மணக்கொள்ளை அருகே அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுவிட்டு, சாலையோரத்தில் இறக்கிவிட்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு முதலில் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பினர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாரிமுத்து (55) என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சேகர் என்ற மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து மழையூர் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN