உபா சட்ட வழக்குகளிலும் ஜாமீன் வழங்கலாம்- சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
புதுடெல்லி , 18 மே (ஹி.ச.) உபா ( யுஏபிஏ) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கலாம் என்றும், குற்றம் நிரூபிக்கப்படாமல் நீண்டகாலம் சிறையில் அடைக்கப்பட்டிருப்போருக்கு ஜாமீன் மறுக்கக்கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட
N


புதுடெல்லி , 18 மே (ஹி.ச.)

உபா ( யுஏபிஏ) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கலாம் என்றும், குற்றம் நிரூபிக்கப்படாமல் நீண்டகாலம் சிறையில் அடைக்கப்பட்டிருப்போருக்கு ஜாமீன் மறுக்கக்கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்ததாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ ) பதிவு செய்த வழக்கில், குப்வாராவைச் சேர்ந்த சையத் இப்திகார் அன்ட்ராபி என்பவர் 2020 ஜூன் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “உபா சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும் ஜாமீன் வழங்குவது விதியாகவும், சிறை என்பது விதிவிலக்காகவும் இருக்க வேண்டும்.

குற்றம் நிரூபிக்கப்படாமல் நீண்டகாலம் சிறையில் அடைக்கப்பட்டிருப்போருக்கு ஜாமீன் மறுக்கப்படக் கூடாது” என்று தெரிவித்தனர்.

மேலும், “உபா வழக்குகளில் கைதானவர்களில் வெறும் 6 சதவீதம் பேருக்கு மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது” என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

இதையடுத்து, மனுதாரரான சையத் இப்திகார் அன்ட்ராபிக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அத்துடன், அவர் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும், 15 நாட்களுக்கு ஒருமுறை உள்ளூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA