Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 18 மே (ஹி.ச.)
அரசு கட்டுப்பாட்டு கோயில் அர்ச்சகர்களின் தற்போதைய ஊதிய விகிதம் பல ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ளதாகவும், வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு ஏற்ப ஊதியத்தை மறுநிர்ணயம் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று பொதுநல மனு மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், சில கோயில்களில் தட்டு காணிக்கையை மட்டுமே நம்பி அர்ச்சகர்கள் வாழ்வதாகவும், நிலையான மாத ஊதியம் இல்லாதது அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள், அர்ச்சகர்களின் ஊதிய நிர்ணயம் என்பது அரசின் கொள்கை முடிவு சார்ந்த விவகாரம் என்றும், இதில் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவிட முடியாது என்றும் தெரிவித்தனர்.
கோயில்களின் வருவாய், பக்தர்களின் வருகை, தட்டு வருமானம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் அறநிலையத்துறை ஊதியத்தை நிர்ணயிப்பதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவு, அரசு கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 44,000-க்கும் மேற்பட்ட கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊதிய உயர்வு தொடர்பாக அரசிடம் மீண்டும் முறையிட உள்ளதாக அர்ச்சகர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அதேநேரம், கோயில் நிர்வாகம் மற்றும் நிதி நிலைமையை கருத்தில் கொண்டே ஊதிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று அறநிலையத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
Hindusthan Samachar / vidya.b