Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 மே (ஹி.ச.)
பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் நேற்று (மே 17) மாலை கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கே.ராஜனின் திடீர் தற்கொலை முடிவு, தமிழ் திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியினை உருவாக்கியுள்ளது.
‘பிரம்மச்சாரிகள்’, ‘டபுள்ஸ்‘, ‘அவள் பாவம்’, ‘நினைக்காத நாளில்லை’ ஆகிய படங்களை தயாரித்தவர் கே.ராஜன். ‘நம்ம ஊரு மாரியம்மா’ மற்றும் ‘உணர்ச்சிகள்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ’தங்கமான தங்கச்சி’ மற்றும் ’சின்ன பூவை கிள்ளாதே’ ஆகிய படங்களின் கதாசிரியராக பணிபுரிந்துள்ளார்.
திரையுலகினர் பலரும் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் திரு கே.ராஜன் அவர்கள் உயிரை மாய்த்துக் கொண்ட செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
தயாரிப்பாளர் திரு கே.ராஜன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b