Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 18 மே (ஹி.ச.)
மே-18 தமிழ்ப்பேரின எழுச்சி நாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் உலகத் தமிழர்களுக்காக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், 2009 ஆம் ஆண்டு ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் நடைபெற்ற இனப்படுகொலையில் உயிரிழந்த தமிழர்களை நினைவுகூர்ந்து, கடந்த 17 ஆண்டுகளாக உலகத் தமிழர்கள் நீதிக்காக போராடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல், சட்டம் மற்றும் அறவழிப் போராட்டங்கள் மூலம் இலங்கை அரசுக்கு எதிராக பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை மற்றும் தமிழீழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தொடர்ந்து கோரப்பட்டு வந்தாலும், இதுவரை தீர்வு எதுவும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் அதிகாரமின்றி உலகம் முழுவதும் சிதறிக்கிடக்கும் இந்தச் சூழலில், இன மீட்சிக்கும் தாயக விடுதலைக்கும் தமிழர்கள் தங்களைத் தாங்களே உணர்வுபூர்வமாக ஒருங்கிணைத்து மீண்டெழ வேண்டும்.
விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல,மீண்டும் எழுவதற்கே என சீமான் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழ்த்தேசிய உணர்வை தடுக்க பல்வேறு அரசியல் சூழ்ச்சிகள் நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டிய அவர், அவற்றை முறியடித்து தமிழர்களின் ஒற்றுமை மற்றும் பலத்தை உலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளார்.
இதனையடுத்து, மே 18 ஆம் தேதி சென்னை மறைமலைநகரில் மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள “தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்தில்” உலகத் தமிழர்கள் பேரெழுச்சியுடன் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
ஈழப்போரின் இறுதி நாட்களில் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்ட தமிழர்களின் துயரத்தை நினைவுகூரும் வகையில், நிகழ்வில் “உப்பில்லா கஞ்சி” அருந்தி நினைவேந்தல் மேற்கொள்ளப்படும் என்றும், இன விடுதலைக்கான உறுதியை மீண்டும் எடுத்துரைப்போம் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
இலக்கு ஒன்றுதான்,இனத்தின் விடுதலை. இனம் ஒன்றாவோம்.
இலக்கை வென்றாவோம் என தனது அறிக்கையை அவர் நிறைவு செய்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P