தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மழை வெளுக்கும் - வானிலை ஆய்வு மையம் கணிப்பு
சென்னை, 18 மே (ஹி.ச.) தமிழ்நாட்டில் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவி வருவதாக வானிலை மையம்
மழை


சென்னை, 18 மே (ஹி.ச.)

தமிழ்நாட்டில் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவி வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதே சமயம், வடகிழக்கு தமிழகம் மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளின் மேல் மற்றொரு வளிமண்டல சுழற்சிநிலவுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.

குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான மத்திகிரி, ஜூஜூவாடி, பேகேபள்ளி, பாகலூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. சிவகங்கை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

இதே போன்று, திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் கொடைக்கானல் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 2 மணி நேரம் பெய்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்நிலையில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதே போன்று, புதுக்கோட்டை, கரூர், திருச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P