டாஸ்மாக் கடையில் ரூ.10 கூடுதல் வசூல் - இளைஞரின் செயினை ஊழியர்கள் அறுத்ததாக குற்றசாட்டு
மயிலாடுதுறை, 18 மே (ஹி.ச.) மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் சட்டத்திற்கு புறம்பாக மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கூடுதல் பணம் கொடுக்க மறுத்த இளைஞரின் செயினை ஊழியர்கள் அற
டாஸ்மாக்


மயிலாடுதுறை, 18 மே (ஹி.ச.)

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் சட்டத்திற்கு புறம்பாக மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கூடுதல் பணம் கொடுக்க மறுத்த இளைஞரின் செயினை ஊழியர்கள் அறுத்ததாக வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு மது பிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கடை மூடப்பட்ட சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோயில்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் செயல்பட்டு வந்த 717 அரசு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.

மேலும், டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதை கண்காணிக்க தவறும் அதிகாரிகள்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பல டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிகாரிகள் இதை கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.

இன்று மயிலாடுதுறை அருகே மூவலூர் கிராமத்தில் உள்ள 5772 எண் அரசு டாஸ்மாக் கடையில், மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கியதை திருப்பிக் கேட்ட இளைஞர் ஒருவர் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, அந்த இளைஞரின் செயினை ஊழியர் ஒருவர் அறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, மது வாங்க வந்த இளைஞர்கள் கடையை முற்றுகையிட்டு ஊழியர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சூழ்நிலை பதற்றமாக மாறியதால் டாஸ்மாக் கடையின் ஷட்டர் மூடப்பட்டது. பின்னர் அப்பகுதி மக்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் இளைஞர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.

சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் கடை திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்றது.

இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆக்கூர் முக்கூட்டு டாஸ்மாக் கடையிலும் மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலித்ததை எதிர்த்து இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஆட்சியில் “பாட்டிலுக்கு ரூ.10” வசூல் செய்யப்படுவதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் விஜய் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், தற்போது தவெக ஆட்சியிலும் அதே நிலை தொடர்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

“எங்களுக்கு உயர் அதிகாரிகளிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை” என்று கூறி கடை ஊழியர்கள் தொடர்ந்து கூடுதல் தொகை வசூலிப்பதாகவும், இதற்கு எதிராக இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த முறைகேடுகளை தடுக்க தமிழக அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam