Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத் , 18 மே (ஹி.ச.)
சமூக சேவையில் ஈடுபட விரும்பும் அனைவரையும் ஒரே மேடையில் இணைக்கும் நோக்கில், நடிகர் மன்சு மனோஜ் மற்றும் அவரது மனைவி மோனிகா இணைந்து “ஐக்ய தைரிய சேனா சமிதி” என்ற சமூக சேவை அமைப்பை தொடங்கினர்.
ஹைதராபாத் நகரின் கூகட்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் ஜூப்லி ஹில்ஸ் தொகுதி எம்.எல்.ஏ நவீன் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அமைப்பின் பெயரை அறிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய மன்சு மனோஜ், “சமூகத்திற்கு உதவுவது எங்கள் குடும்ப மரபு. ஒரே எண்ணம் கொண்டவர்களை ஒன்றிணைக்கும் ஒரு அமைப்பு தேவையாக இருந்தது.
அந்த எண்ணமே ‘ஐக்ய’ அமைப்பாக உருவெடுத்தது. இதற்கான சிந்தனை என் மனைவி மௌனிகாவுக்கே சொந்தமானது” என்றார்.
மேலும், முதல் கட்டமாக 5 குழந்தைகளின் கல்விச்செலவுகளை தாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இந்த சேவையை இரு தெலுங்கு மாநிலங்களின் கிராமங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து மௌனிகா பூமா கூறுகையில்,
பெண்கள் அதிகாரமடைதல், வேலைவாய்ப்பு உருவாக்கம், ரத்ததானம் போன்ற பணிகளில் கவனம் செலுத்த உள்ளோம்.
‘நமஸ்தே வேர்ல்ட்’ திட்டத்தின் மூலம் பொம்மை தயாரிப்பு பயிற்சிகளை வழங்கி பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்” என்று தெரிவித்தார்.
எம்.எல்.ஏ நவீன் யாதவ், மனோஜ் குடும்பத்துடன் நீண்டகால தொடர்பு உள்ளதாகவும், சிறுவயதிலிருந்தே மனோஜ் சமூக சேவையில் ஆர்வம் கொண்டவர் என்றும் பாராட்டினார்.
பிறந்தநாளை முன்னிட்டு இந்த அமைப்பை தொடங்கியிருப்பது பாராட்டத்தக்கது என்றும், தனது முழு ஆதரவும் இருக்கும் என்றும் உறுதியளித்தார்.
திரைப்படங்களில் பிஸியாக செயல்பட்டு வரும் மன்சு மனோஜ், சமூக சேவையிலும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA