Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 18 மே (ஹி.ச.)
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் சுமார் 37,000 வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று நடிகர் ஸ்ரீநாத் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் இன்று (மே 18) காலை தூத்துக்குடியில் தனது புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முறைப்படி திறந்து வைத்து, தொகுதி மக்களின் குறைதீர்க்கும் பணிகளை முறைப்படி தொடங்கினார்.
அலுவலகத் திறப்பு விழாவைத் தொடர்ந்து தொகுதிப் பொதுமக்கள் பலரிடம் இருந்து கோரிக்கை மனுக்களை அவர் நேரடியாகப் பெற்றுக் கொண்டார்.
பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ரீநாத் எம்.எல்.ஏ. கூறியதாவது,
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நிலவி வரும் சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதிகள் குறித்து அடுத்த சில நாட்களில் நானே நேரில் சென்று அதிரடி ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளேன்.
நகரின் மையப் பகுதியில் உள்ள கோவில்கள், ஆலயங்கள், தேவாலயங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு மிக அருகில் விதிகளை மீறிச் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாகக் கண்டறிந்து, அவற்றை முற்றிலுமாக மூடுவதற்குத் தேவையான அனைத்துச் சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்படும்.
மேலும், தூத்துக்குடி மாநகராட்சியின் மிக முக்கியப் பிரச்சினையான பக்கிள் ஓடை கழிவுநீர் மற்றும் ஆலைகளின் அசுத்த நீர் எவ்விதச் சுத்திகரிப்பும் இன்றி நேரடியாகக் கடலில் கலந்து கடல்வளத்தையும், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும் பாழாக்குவது குறித்துத் துறை சார்ந்த அதிகாரிகளுடன் இணைந்து நேரில் ஆய்வு செய்து, அதற்கு நிரந்தரத் தீர்வு காண முன்னுரிமை வழங்கப்படும்.
தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடியில் மக்கள் நலன் சார்ந்த நேர்மையான நிர்வாகம் மட்டுமே நடைபெறும். தமிழக முதல்வர் மற்றும் கழகத்தின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி எவரேனும் ஆடம்பரம், தேவையற்ற ஆர்ப்பாட்டம், பொதுமக்களிடமும் வணிகர்களிடமும் கலெக்ஷன் செய்தல் அல்லது அதிகார துஷ்பிரயோகம் மூலம் கரப்ஷன் போன்ற தவறான செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது கட்சி ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் மிகக் கடுமையான, தயவுதாட்சண்யமற்ற நடவடிக்கைகள் பாயும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வின் போது, தவெக தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளர் சாம்ராஜ், வடக்கு மாவட்டக் காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி, முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அருட்தந்தையர்கள், உடனிருந்தனர்.
Hindusthan Samachar / vidya.b