தமிழகத்தில் 17 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
சென்னை, 18 மே (ஹி.ச) தமிழகத்தில் 17 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி வந்த ககன்தீப் சிங் பேடி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துற
Tamil Nadu Secretariat


சென்னை, 18 மே (ஹி.ச)

தமிழகத்தில் 17 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி வந்த ககன்தீப் சிங் பேடி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த அமுதா, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளராக இருந்த சத்தியபிரதா சாகு, நீர்வளத் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளராக இருந்த சுக்சோங்கம் ஜடக்சிரு, பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

மேலும், அவர் இயற்கை வளத் துறை முதன்மைச் செயலாளராகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

தமிழ்நாடு கனிமவள மேலாண்மை இயக்குநராக இருந்த அனில் மேஷ்ராம், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மறுவாழ்வு மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை ஆணையராக இருந்த வள்ளலார், போக்குவரத்துத் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக இருந்த பழனிச்சாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வேளாண் உற்பத்தி ஆணையரும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளருமான தக்ஷிணாமூர்த்தி, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

திட்டம் மற்றும் மேம்பாட்டுத் துறை செயலாளராக இருந்த ஷஜன்சிங் சவுகான், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதித்துறை செலவினச் செயலாளராக இருந்த பிரசாந்த் வட்நேரே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

நிதித்துறை சிறப்புச் செயலாளராக இருந்த அருண் சுந்தர் தயாளன், பதிவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் முதலமைச்சரின் இணைச் செயலாளராக இருந்த லட்சுமிபதி, நிதித்துறையின் இணைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆணையராக இருந்த ஆனந்த், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இயக்குநராக இருந்த ராகுல்நாத், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்த சமீரன், பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் துணை முதலமைச்சரின் கூடுதல் செயலாளராக இருந்த ஆர்த்தி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

பதிவுத்துறை ஐஜியாக இருந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ