Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 மே (ஹி.ச.)
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.குமார் இன்று (மே 18) காலை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பெசன்ட்நகர் கடற்கரையில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்கள், தாங்கள் தூய்மைப் பணிக்கு பயன்படுத்தும் உபகரண பொருட்களை மாநகராட்சி நிர்வாகம் வாங்கித் தருவதில்லை.
இதனால் நோய்தொற்றுக்கு ஆளாவதாக புகார் அளித்தனர்.மேலும், தங்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
அதேபோல், கடற்கரை ஓரத்தில் நடைபயிற்சி மேற்கொண்டவர்களில் சிலர், கடற்கரை முழுவதும் மதுபாட்டில்கள் சிதறி கிடைப்பதாகவும், குறிப்பிட்ட சில இடங்களில் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் கிடைப்பதாகவும் புகார் தெரிவித்தனர்.
இந்த புகார்கள் அனைத்தையும் கேட்டறிந்த எம்எல்ஏ ஆர்.குமார்,
கடற்கரைக்கு அருகே இருந்த அரசு உடற்பயிற்சி கூடத்தின் உள்ளே சென்று அதன் நிலை குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது, உடற்பயிற்சி கூடத்தின் உள்ளே முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படம் அடங்கிய பதாகை பொருத்தப்பட்டு இருந்ததை அவர் பார்த்துள்ளார். இதையடுத்து, குறிப்பிட்ட அந்த பதாகையை விரைவாக அகற்றிட உடற்பயிற்சி கூட பணியாளர்களுக்கு வேளச்சேரி எம்எல்ஏ குமார் உத்தரவிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது எம்எல்ஏ குமார் கூறியபோது ,
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், பல்வேறு மக்கள் நல திட்டங்களைக் கொண்டு வர உள்ளார். அதற்கு பொதுமக்கள் ஆகிய நாமும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இந்த கடற்கரையை சுத்தமாக வைத்துக் கொள்வதற்காக துப்புரவுப் பணியாளர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முயற்சியில் பணியாற்றி வருகின்றனர். மேலும், சுமார் 32 இடங்களில் குப்பைகள் கொட்டுவதற்காக மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அனைவரும் தயவு செய்து குப்பைகளை அதில் போட வேண்டும். போஸ்டர்கள் ஒட்டுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும். அதை சுத்தம் செய்யும்போது பணியாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதேபோல் கடற்கரையில் செயல்பட்டு வரும் கடைகளை பற்றி ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றார்.
வேளச்சேரி எம்எல்ஏ ஆர். குமார்-இன் இந்த திடீர் ஆய்வு தொகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
சோதனையுடன் நிறுத்திக் கொள்ளாமல், பொதுமக்களின் தேவையையும் விரைந்து பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN