Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 19 மே (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழை பெய்துள்ளது.
இந்த நிலையில் ஆத்தூர் பகுதியில் வசித்து வரும் கருப்பையா என்பவர் நேற்று இரவு 8.30 மணி அளவில் தனது வீட்டு மாடிக்கு சென்றபோது, மழையால் அறுந்து கீழே கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் மிதித்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வெகு நேரம் ஆனதால் திரும்பி வராத அவரை தேடிச் சென்ற மனைவி சுதா, தனது கணவர் மின்சாரம் தாக்கி துடிப்பதைக் கண்டு அவரைக் காப்பாற்றும் முயற்சியில் ஓடிச் சென்று தொட்டுள்ளார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
அலறல் சத்தம் கேட்டு அப்போது ரோட்டில் நடந்து சென்ற இதே பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் சுப்பிரமணியசிவா 18, அங்கு சென்று காப்பாற்ற முயன்ற போது மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டார்.
இவரது அலறல் கேட்டு, அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது தேங்கிய தண்ணீரில், தெருவிளக்கிற்கான மின் கம்பி அறுந்து கிடப்பதை கண்டனர்.
இதையடுத்து அப்பகுதியில் மின்வினியோகம் நிறுத்தப்பட்டு, மூவரும் மீட்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மூவரும் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் 3 பேரும் இறந்ததை உறுதி செய்தனர்.
இச்சம்பவம் குறித்து செம்பட்டி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கனமழை காரணமாக மாடியில் சென்ற மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது. இரவு நேரம் என்பதால் அறுந்த கம்பி வெளியே தெரியாமல் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது தெரிய வந்தது.
மின்வாரிய ஊழியர்கள், மின் கம்பி சீரமைப்பு பணியை மேற்கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b