கனகபட்டணம்’ ஆக மாறும் காவலி - ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதி
நெல்லூர் , 19 மே (ஹி.ச.) மாநில மீனவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுத்துவதே அரசின் முக்கிய குறிக்கோள் என ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது அறிக்கையில் தெரிவித்தார். நெல்லூர் மாவட்டம் காவலி தொகுதியில் உள்ள தும்மலபெண்டாவில் நடை
A


நெல்லூர் , 19 மே (ஹி.ச.)

மாநில மீனவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுத்துவதே அரசின் முக்கிய குறிக்கோள் என ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது அறிக்கையில் தெரிவித்தார்.

நெல்லூர் மாவட்டம் காவலி தொகுதியில் உள்ள தும்மலபெண்டாவில் நடைபெற்ற ‘மீனவர் சேவை’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசியபோது, மாநிலம் முழுவதும் 1,30,796 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.20,000 வீதம் மொத்தம் ரூ.262 கோடி நேரடியாக வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுவதாக அறிவித்தார்.

மேலும், மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.10,000 இலிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தேர்தலில் அளித்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றியுள்ளதாகவும் கூறினார்.

ஒருகாலத்தில் வணிக வளம் பெற்ற ‘கனகபட்டணம்’ என்ற பெயருக்கு உரிய பெருமையை காவலி மீண்டும் பெறும் என்றும், வளர்ச்சி பணிகள் விரைவாக முன்னெடுக்கப்படுகின்றன என்றும் முதல்வர் கூறினார்.

காவலி தொகுதி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களுக்கு அவர் ஒப்புதல் அளித்தார்.

25 மீனவர் கிராமங்களை இணைக்கும் வகையில் ரூ.6.27 கோடியில் சாலை அமைப்பு, பக்கிங்காம் கால்வாய் தூர்வாரத்திற்கு ரூ.6.9 கோடி, மின்சார பிரச்சினைகளை தீர்க்க 220/133/33 கேவி துணை மின் நிலையம் அமைப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் நலனில் எந்தவித சமரசமும் இல்லை என்றும், “கடலும் நமதே, மீன்பிடியும் நமதே என அவர் வலியுறுத்தினார்.

பிற மாநில மீனவர்கள் சட்டவிரோதமாக நுழைந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

கடலோர பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டு, ரோந்து படகுகள் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், 60 சதவீத மானியத்தில் 200 நவீன மீன்பிடி படகுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

பெண்களின் வருமானத்தை உயர்த்த கடல் பாசி வளர்ப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதற்கான பயிற்சி மற்றும் சந்தை வசதிகளை அரசு ஏற்பாடு செய்யும் என்றும் கூறினார்.

நிகழ்ச்சி மேடையிலேயே பல துறைகளின் பணிகளை ஆய்வு செய்த முதல்வர், மக்கள் திருப்தியே அரசின் செயல்திறனை நிர்ணயிக்கும் அளவுகோல் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

காவலி விரைவில் ‘கனகபட்டணம்’ ஆக வளர்ச்சி பெறும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு நம்பிக்கை தெரிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA