ரூ.993 கோடி மதிப்பில் உருவாகும் அரக்கோணம் - செங்கல்பட்டு இருவழி ரயில் பாதை திட்டத்திற்கு ஒப்புதல்
சென்னை, 19 மே (ஹி.ச.) சென்னையில் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் புறநகர் ரயில் போக்குவரத்தை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக, அரக்கோணம் - செங்கல்பட்டு இடையே புதிய இரட்டை வழி ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு ரயில்வே நிர்வாகம் ஒப்புதல்
ரூ.993 கோடி மதிப்பில் உருவாகும் அரக்கோணம் - செங்கல்பட்டு இருவழி ரயில் பாதை திட்டத்திற்கு ஒப்புதல்


சென்னை, 19 மே (ஹி.ச.)

சென்னையில் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் புறநகர் ரயில் போக்குவரத்தை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக, அரக்கோணம் - செங்கல்பட்டு இடையே புதிய இரட்டை வழி ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

ரூ.993 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்தில், அரக்கோணம் முதல் செங்கல்பட்டு வரை சுமார் 68 கிலோமீட்டர் தூரத்திற்கு இரட்டை வழிப்பாதை அமைக்கப்பட உள்ளது.

இந்த புதிய வழித்தடம் சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் ஆகிய முக்கிய நகரங்களை நேரடியாக இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது அரக்கோணம் - செங்கல்பட்டு இடையே ஒற்றை வழிப்பாதை மட்டுமே உள்ளதால், ரயில்களின் வேகம் குறைவதுடன் குறுக்கீடுகளும் அதிகமாக உள்ளன. இரட்டை வழிப்பாதை அமைக்கப்பட்டால் சரக்கு மற்றும் பயணிகள் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.

குறிப்பாக, சென்னையில் இருந்து திருப்பதி, பெங்களூரு மார்க்கமாக செல்லும் ரயில்களுக்கு இது முக்கிய மாற்று வழியாக அமையும் என ரயில்வே அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

மேலும், காஞ்சிபுரம், தக்கோலம், வாலாஜாபாத் உள்ளிட்ட புறநகர் பகுதிகள் வழியாக செல்லும் பயணிகளுக்கு பயண நேரம் குறைவதுடன், கூடுதல் ரயில் சேவைகளும் கிடைக்க வாய்ப்புள்ளது.

தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் தற்போது நிலவும் கடும் நெரிசலும் இதன் மூலம் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்திற்கான கள ஆய்வு மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Hindusthan Samachar / vidya.b