Enter your Email Address to subscribe to our newsletters

அரியலூர், 19 மே (ஹி.ச.)
பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சோழர் காலத்து செப்பேடுகளை கங்கைகொண்ட சோழபுரத்தில் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட வேண்டும் என கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழும தலைவர் வலியுறுத்தி உள்ளார்.
நெதர்லாந்து நாட்டிற்கு அரசுமுறைப் பயணமாகச் சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வரலாற்றுச் சிறப்புமிக்க 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, சோழர் காலத்து ஆனைமங்கலம் செப்பேடுகள் அந்நாட்டு அரசால் ஒப்படைக்கப்பட்டன.
இதில், கிபி 985 முதல் 1014 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த மாமன்னர் முதலாம் ராஜராஜ சோழன் உள்ளிட்ட சோழர்களின் ஆட்சிக் காலத்தை பற்றிய பல்வேறு முக்கிய தகவல்கள் உள்ளன. இதில், சோழர் காலத்தில் நீர் நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகம், சோழர்களின் வெற்றிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடியிடம் ஒப்படைத்துள்ள இந்த செப்பேடுகளை கங்கைகொண்ட சோழபுரத்தில் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட வேண்டும் என கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழும தலைவரும், ஆய்வாளருமான கோமகன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
சோழர்களின் பெருமைகள், ஆட்சி முறைகள் குறித்து வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில், நெதர்லாந்து நாட்டில் பாதுகாக்கப்பட்டிருந்த சோழர் காலத்து செப்பேடுகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
ராஜராஜ சோழன் கி.பி 1005 ஆம் ஆண்டில் ஆனைமங்கலம் செப்பேட்டை ஆணையாக பிறப்பித்தார். தந்தையின் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக அவரின் இறப்பிற்கு பின்னர், 1014 ஆம் ஆண்டில் ராஜராஜ சோழன் இந்த செப்பேட்டை வெளியிட்டார். நாகப்பட்டினத்தில் உள்ள புத்த விகாரத்திற்கு ஆனைமங்கலம் கிராமம் தானமாக வழங்கப்படுவதை குறிக்கக் கூடியதே இந்த செப்பேடு.
இதுதவிர, இந்த செப்பேட்டின் மூலம் புத்த மதத்திற்கும், சைவ மதத்திற்கும் என்ன மாதிரியான நல்லிணக்கம் இருந்தது என்பது தெரிய வந்துள்ளது. இதேபோல், சோழர்கள் தென்கிழக்கு ஆசியா முழுக்க எப்படி ஆட்சி செய்தார்கள்? கடல் வழி வணிகம் எப்படி இருந்தது? தானங்கள், நிதி நிர்வாகம் மற்றும் நில நிர்வாகம் உள்ளிட்டவை எப்படி நிர்வகிக்கப்பட்டன என்பதையும் இந்த செப்பேடு விளக்குகிறது.
இத்தகைய சோழ வரலாற்றை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
அது அருங்காட்சியகத்தில் முடங்கிப் போகாமல், பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டு வரப்பட வேண்டும். கங்கைகொண்ட சோழபுரத்திலேயே அது நிரந்தரமாக காட்சிப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN