பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை - வனத்துறை அறிவிப்பு
திருப்பூர், 19 மே (ஹி.ச.) திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பஞ்சலிங்க அருவி மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆனைமலைத் தொடரில் அமைந்துள்ளது. இந்த இடம் ஆன்மீகம், தியானம் மற்றும் இயற்கை எழிலுக்குப் பெயர் பெற்றது. அ
Ban on Tourists Bathing at Panchalinga Falls


திருப்பூர், 19 மே (ஹி.ச.)

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பஞ்சலிங்க அருவி மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆனைமலைத் தொடரில் அமைந்துள்ளது.

இந்த இடம் ஆன்மீகம், தியானம் மற்றும் இயற்கை எழிலுக்குப் பெயர் பெற்றது.

அருவியின் அருகில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே வடிவமாய் எழுந்தருளியுள்ள புகழ்பெற்ற ஸ்ரீ அமணலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.

மலையின் மீதுள்ள பாறைகளில் செதுக்கப்பட்ட ஐந்து சிவலிங்கங்கள் வழியாகத் தண்ணீர் விழுவதால் இதற்கு 'பஞ்சலிங்க அருவி' என்று பெயர் வந்தது.

சுமார் 5 மீட்டர் உயரத்தில் இருந்து விழும் இந்த அருவியின் நீர் மிகவும் தூய்மையானதாகவும் மூலிகை குணம் கொண்டதாகவும் இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இந்த அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையின் காரணமாக, பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளது.

அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக நீரோட்டத்தின் வேகம் அதிகமாக உள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,

மலைப்பகுதிகளில் மழை தொடர்வதால் அருவிக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. பாறைகள் வழுக்கும் தன்மையுடன் இருப்பதாலும், நீரின் வேகம் கணிக்க முடியாத அளவுக்கு இருப்பதாலும், பொதுமக்கள் குளிப்பதற்கு முழுமையாகத் தடை விதிக்கப்படுகிறது. மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

என்று தெரிவித்தனர்.

எனினும், சுற்றுலாப் பயணிகள் அருவியின் இயற்கை அழகைப் பாதுகாப்பான தூரத்தில் இருந்து பார்வையிடுவதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அருவிப் பகுதியில் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நீர்வரத்து சீராகும் வரை குளிக்கும் தடை தொடரும் என்றும், வானிலை நிலவரத்தைப் பொறுத்து அடுத்தகட்ட அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b