பலமான அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்பதே எங்களின் ஒரே நோக்கம் - சி.வி.சண்முகம்
சென்னை, 19 மே (ஹி.ச.) தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவைத் தொடர்ந்து, த.வெ.க. தலைவர் விஜய் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த 13ஆம் தேதி சட்டமன்றத்தில் நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில், சி.வி. சண்முகம் தலைமையிலான எம்.எ
C.V. Shanmugam.


சென்னை, 19 மே (ஹி.ச.)

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவைத் தொடர்ந்து, த.வெ.க. தலைவர் விஜய் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த 13ஆம் தேதி சட்டமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வாக்கெடுப்பில், சி.வி. சண்முகம் தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் 25 பேர், முதல்வர் விஜய்யின் த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அதே சமயம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 22 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு எதிராக வாக்களித்தனர். தனது உத்தரவை மீறி வாக்களித்ததால், சி.வி. சண்முகம், விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 28 பேரின் மாவட்டச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி நீக்கி உத்தரவிட்டார். மேலும் அவர்களுக்குப் பதிலாக புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்தும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று (19-05-26) ஆலோசனை நடத்தினார்.

அதேபோல் சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள சி.வி.சண்முகத்தின் அலுவலகத்தில் அவரது தரப்பினர் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பினர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

அதில் சி.வி.சண்முகம் பேசியதாவது,

இந்த தேர்தலில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மீண்டும் ஒரு படுதோல்வியை சந்திருக்கிறோம்.

இந்த தோல்வி ஏதோ இந்த தேர்தலில் மட்டும் வந்த தோல்வி அல்ல. 2019ஆம் ஆண்டு முதல் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. தோல்விக்கு தோல்வி அதிமுகவினுடைய வாக்கு வங்கி சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இது இந்த இயக்கத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். இந்த தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும், ஆராய வேண்டும், கலந்து ஆலோசிக்க வேண்டும், அதிமுகவை மீண்டும் எப்படி வெற்றி பாதைக்கு கொண்டு வேண்டும், இயக்கத்தை வலிமைப்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக நாங்கள் எல்லாம் இந்த தோல்விக்கு பிறகு கோரிக்கை வைத்தோம். இதை பற்றி கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று சொன்னோம்.

2024 நாடாளுமன்ற தோல்விக்கு பிறகு நாங்கள் அவரை சந்தித்து பேசினோம். இனியும் இந்த நிலை தொடர்ந்தால் நாம் எதிர்காலத்தில் வெற்றி பெற முடியாது. பிரிந்தவர்கள், பிரிந்து சென்றவர்கள், நீக்கப்பட்டவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு வலிமையான அதிமுகவை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தபோது அதை நிராகரித்தார் ஏற்றுக்கொள்ள மறுத்தார்.

அன்றைக்கு தலைமை கழகத்தில் ஒவ்வொரு மாவட்ட கழகமாக கூட்டி அதை திசை திருப்பினார். தோல்விக்கான காரணத்தை ஆய்வு செய்யப்படவில்லை. அன்றைக்கு உண்மையான ஒரு ஆய்வு கூட்டம் நடைபெற்றிருந்தால் இந்த இயக்கத்தில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற உண்மை நிர்வாகிகளுக்கு தெரிந்திருக்கும். ஆனால் அதை செய்ய தவறிவிட்டார்.

வலிமையான கூட்டணியை வையுங்கள், அமையுங்கள் என்றும் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வையுங்கள் என்று அத்தனை பேரும் சொன்னோம். தமிழக வெற்றி கழகத்தின் சார்பாகவும் கூட்டணி வைப்பதற்கு நம்மோடு பேச்சு நடத்தினார்கள். இன்று அவர் இல்லை என்று மறுக்கலாம், ஆனால் உண்மை அதுதான். கூட்டணி பேச வந்தவர்களை உதாசீனப்படுத்தினார். கூட்டணி எப்படி எல்லாம் அமையக்கூடாது என்பதற்காக எப்படியெல்லாம் பேச வேண்டுமோ அதையெல்லாம் பேசி அவர்களை வெளியேற்றுவதில் குறியாக இருந்தார்.

தமிழக வெற்றி கழகத்தை மட்டுமல்ல, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தையும் சேர்ப்பதற்கு அவருக்கு மனமில்லை. அதை அரை சதவீதம் கட்சி என்று சொன்னார். இப்படி சொன்னால் எந்த கட்சி ஏற்றுக்கொள்ளும்? அவர்களும் வலுக்கட்டாயமாக இந்த கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். டாக்டர் கிருஷ்ணசாமி போன்ற யாரையும் அரவணைக்காமல் நான் மட்டும் இருந்தால் போதும், எனக்கு மட்டும்தான் வாக்களிப்பார்கள் என்ற மனநிலையில் யாரையுமே அரவணைக்காமல் இருந்தார்.

இந்த இயக்கத்திற்காக ஒரு காலத்தில் பாடுபட்ட ஓபிஎஸ் ஏதோ ஒரு காரணத்திற்காக தவறு செய்திருந்தாலும் திருந்தி நான் அந்த இயக்கத்தில் வருகிறேன் எனக்கு எந்த பொறுப்பும் வேண்டாம் ஒரு உறுப்பினராக இருக்கிறேன் என்று கடைசி வரைக்கும் சொன்னார்.

அதிமுகவில் ஒரு உறுப்பினராக என்னை இணைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். ஆனால் அதையும் ஏற்றுக்கொள்ள மறுத்தார்.எந்த காரணத்தை கொண்டும் அந்த நான்கு பேரை சேர்க்க மாட்டேன் என்று சொன்னார். இன்று ஒரு அறிக்கை விட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், இன்றுவரை இயக்கத்திற்கு துரோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் அவர்கள் திருந்தினால் தாய் உள்ளத்துடன் மீண்டும் ஏற்றுக்கொள்ளவும் தெரியும். அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று நாம் செயலாற்றி வருகிறோம் என்று தெரிவித்திருக்கிறார். அப்படியா செயலாற்றிருகிறீர்கள்? தன்னுடைய பொறுப்புக்கு பாதிப்பு வருகிறது என்ற உடனே தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று சொல்கிறார்.

இதை கடந்த காலத்தில் செய்திருந்தால், பிரிந்தவர்களை இணைத்திருந்தால் ஒருங்கிணைத்திருந்தால் இந்த நிலைமை ஏன் அதிமுகவுக்கு ஏற்பட்டிருக்கும்? இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக வந்திருப்பார். இல்லையென்றாலும் அவருடைய கண்ணசைவில் ஆட்சி அமைந்திருக்கும். அதை தடுத்தது யார்? அதை கெடுத்தது யார்? கெடுத்தது மட்டுமில்ல மிகப்பெரிய இயக்கமான இந்த அதிமுகவை இன்றைக்கு படுதோல்வி அடைய செய்ததற்கு யார் காரணம்? எல்லாம் செய்துவிட்டு தங்களை நல்லவர்களை போல இன்றைக்கு அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் அதிமுகவுக்கு துரோகம் செய்துவிட்டதுபோல இன்று அறிக்கை வெளியிடுகிறார். தனிப்பட்ட முறையில் யாரையும் நாங்கள் விமர்சனம் செய்யமாட்டோம். ஆனால், எங்களையும், எங்கள் குடும்பத்தையும் பற்றி கண்ணியமற்று விமர்சிக்கிறார்கள். பலமான அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்பதே எங்களின் ஒரே நோக்கம். இன்று பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்கிறார்.

அதற்காகவே நாங்கள் பொதுக்குழுவை கூட்டி விவாதிப்போம் எனக் கோரிக்கை விடுக்கிறோம். பொதுக்குழுவை கூட்டி இரு தரப்பும் கருத்தை தெரிவிப்போம், பெரும்பான்மை உறுப்பினர்கள் எதனை ஏற்றுக் கொள்கிறார்களோ அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

ஒருபக்கம் பேசித் தீர்க்கலாம் என சொல்லிவிட்டு, மறுபுறம் 31 மாவட்டச் செயலாளர்களை பழனிசாமி நீக்குகிறார். பொதுக்குழுவை கூட்ட கையெழுத்துப் போட்டால் உங்கள் பதவி பறிக்கப்படும் என அச்சுறுத்தல் விடுக்கிறார். இதுபோல மிரட்டப்பட்டால் எப்படி கட்சி வளரும்? கட்சி பொறுப்புகளில் இருந்து பழனிசாமியால் நீக்கப்பட்டது சட்டப்படி செல்லாது. பன்னீர்செல்வம் - பழனிசாமி தொடர்பான வழக்கில், ஜெயலலிதா இருந்தபோது பொறுப்புகளில் இருந்தவர்களுக்கே கையெழுத்து போடும் அதிகாரம் என தீர்ப்பு வந்தது.

அதேபோல, அதிமுகவில் எங்களுக்கும், பழனிசாமி தரப்புக்கும் மோதல் ஏற்பட்ட மே 11ஆம் தேதிக்கு முன்பு யாரெல்லாம் பொறுப்பில் இருந்தார்களோ, அவர்களே பதவியில் நீடிப்பார்கள். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதிமுக சட்டவிதிகளின் படி 5ல் 1 பங்கு பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்தை பெற்று பொதுச்செயலாளரிடம் கொடுத்தால், பொதுக்குழுவை 30 நாட்களுக்குள் கூட்டவேண்டும் என உள்ளது.

ஆனால் சர்வாதிகாரமாக பழனிசாமி அதனை ஏற்க மறுக்கிறார். மறுபுறம் பொதுக்குழுவை கூட்ட வேண்டாம் என சுற்றறிக்கை விடுகிறார். பொதுக்குழுவை கூட்டி தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க வேண்டும். அனைவரையும் ஒருங்கிணைத்து அதிமுகவை வலிமையான இயக்கமாக்க வேண்டும். நாங்கள் பேசத் தயார், ஆனால் பொதுக்குழுவை கூட்டி விவாதம் செய்ய வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b