Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 மே (ஹி.ச)
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் காலை - மாலை இரு நேரமும் பயோ-மெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜோசப் விஜய் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு துறைகள் சார்ந்த ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். ஆய்வுக் கூட்டங்களை தொடர்ந்து பல்வேறு விஷயங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஏற்கனவே மின்துறை, பள்ளி கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆய்வுகள் நடத்தி, அந்தந்த துறை அதிகாரிகளிடம் பல்வேறு ஆலோசனைகளை தமிழக முதலமைச்சர் விஜய் வழங்கியிருந்தார்.
அந்த வகையில், இது போன்ற ஒரு ஆய்வுக் கூட்டத்தில், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முறையாக பணிக்கு வருவது இல்லை என்ற புகார் எழுந்தது. இதனையடுத்து அரசு அதிகாரிகள், ஊழியர்களை கண்காணிக்க தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை மாநகராட்சியில் மொத்தமாக 36,381 பேர் பணிபுரிகின்றனர். இதில் 12,960 பேர் நிரந்தர பணியாளர்களாகவும், 23,421 ஒப்பந்த பணியாளர்களாகவும் உள்ளனர். இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணி நேரத்தில் முறையாக அலுவலகத்திற்கு வருவதில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.
இந்த புகாரானது முதலமைச்சரிடம் கொண்டு செல்லப்படவே, இதனை தடுக்க அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவு மேற்கொள்ள அவர் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் தான் தினந்தோறும் உள்ளே பணிக்கு வரும் போதும், பணி முடிந்து வெளியே போகும் போதும் முறையே காலை மற்றும் மாலை ஆகிய இரு நேரங்களிலும் ஊழியர்கள் தங்கள் வருகையை, சென்னை பெருநகர மாநகராட்சியில் பொருத்தப்பட்டுள்ள பயோமெட்ரிக் இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அது மட்டுமல்லாமல், அலுவலக பணி தவிர, வெளியே ஆய்வுக்கு செல்பவர்கள் அல்லது அலுவலக பணிக்காக வெளியே செல்லும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்களது கைபேசியில் பிரத்யேக செயலி மூலம் தங்களது புகைப்படம், இருப்பிடம் (location) உள்ளிட்ட தரவுகளோடு செயலி மூலம் வருகை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த வருகை பதிவை மேலதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டம் இன்னும் ஒரு வாரத்தில் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN