சென்னை எழும்பூரில் புதிய மல்டிலெவல் கார்-பைக் பார்க்கிங் வசதி
சென்னை, 19 மே (ஹி.ச.) சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை 842 கோடி மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த முனையமாக மாற்றும் மறுசீரமைப்புப் பணிகள் நடந்துவருகிறது. இதன் முக்கியப் பகுதியாக, நிலையத்தின் காந்தி-இர்வின் சாலைப் பகுதியில் அதிநவீன அடுக்குமாடி வாகன
Egmore


சென்னை, 19 மே (ஹி.ச.)

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை 842 கோடி மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த முனையமாக மாற்றும் மறுசீரமைப்புப் பணிகள் நடந்துவருகிறது.

இதன் முக்கியப் பகுதியாக, நிலையத்தின் காந்தி-இர்வின் சாலைப் பகுதியில் அதிநவீன அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தை (MLCP) தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது.

இது ரயில் நிலையப் பகுதியில் பயணிகளின் அணுகுமுறை மற்றும் போக்குவரத்து மேலாண்மையை கணிசமாக மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

தென்னிந்தியாவின் பரபரப்பான ரயில் முனையங்களில் ஒன்றான சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், தினசரி லட்சக்கணக்கான பயணிகள் வந்துசெல்கின்றனர்.

இவ்வாறு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

பயணிகள் அதிகம் வந்து செல்வதால், அவர்களின் வாகனங்களுக்கு பார்க்கிங் வசதி கிடைக்காமல், எழும்பூர் ரயில் நிலையம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குமுறி வந்தனர்.

இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கத்தில் தான், இந்த புதிய அடுக்குமாடி வாகன நிறுத்துமிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

காந்தி-இர்வின் சாலைப் பகுதியில் உள்ள பல்நோக்கு வளாகத்தில் (MFC) அமைக்கப்பட்டுள்ள இந்த வாகன நிறுத்துமிடம், நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்த ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்கள், தலா 3,442 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளன.

இந்த இரண்டு தளங்களிலும் சேர்த்து 122 நான்கு சக்கர வாகனங்களையும், 68 இருசக்கர வாகனங்களையும் நிறுத்த முடியும்.

மேலும், 2,842 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள நான்காவது தளத்தில், 62 நான்கு சக்கர வாகனங்களையும், 34 இருசக்கர வாகனங்களையும் நிறுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியினால் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவது குறைக்கப்பட்டு, நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து தடையின்றி நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நவீன வாகன நிறுத்துமிடத்தில் 22 மின்சார வாகன (EV) சார்ஜிங் அமைப்புகள், 24 மணிநேர சிசிடிவி கேமரா கண்காணிப்பு, தானியங்கி வாகன மேலாண்மை அமைப்புகள், பொது அறிவிப்பு வசதி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் பயணிகளின் வசதிக்காகக் கட்டணக் கழிப்பிடங்கள், ஓட்டுநர்களுக்கான ஓய்வறைகள், ஸ்மார்ட் லாக்கர் வசதிகள், வாகன மெருகூட்டல் (Vehicle Detailing) சேவைகள், சிற்றுண்டி நிலையங்கள் போன்ற கூடுதல் வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தில் மேம்பட்ட தீயணைப்பு பாதுகாப்பு உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதில் சறுக்காத தரைத்தளம், பாதுகாப்பு கைப்பிடிகள், பிரத்யேக அவசரகால வெளியேற்றப் படிக்கட்டுகள், மாற்றுத்திறனாளிகள் (Divyangjan) எளிதாகப் பயன்படுத்தும் வகையில் 20 பயணிகள் பயணிக்கும் திறன் கொண்ட நவீன மின்தூக்கி (Lift) வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இந்த அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் பாரம்பரியத்தைப் பேணிப் பாதுகாத்து, அதை ஒரு நவீன மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து மையமாக மாற்றும் சென்னை கோட்டத்தின் தொலைநோக்குப் பார்வையின் ஒரு முக்கிய அங்கமாகப் பார்க்கப்படுகிறது.

இதேபோல ஒரு அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் பூந்தமல்லி நெடுஞ்சாலைப் பக்கத்திலும் மிக வேகமாகத் தயாராகி வருகிறது. இது முழுமையடையும் போது, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் வாகன நிறுத்துமிடத் திறன் பலமடங்கு அதிகரிக்கும் என சென்னை ரயில்வே கோட்டம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN