சேர்வராயன் சுரங்கத் தோண்டும் இயந்திரம் மூலக்கடை நிலையத்தை வந்தடைந்தது - சென்னை மெட்ரோ தகவல்
சென்னை, 19 மே (ஹி.ச.) சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-2 பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வழித்தடம்-3ல் பயன்படுத்தப்பட்டு வந்த ‘சேர்வராயன்’ என பெயரிடப்பட்ட சுரங்கத் தோண்டும் இயந்திரம் தனது பணியை வெற்றிகரமாக நிறைவு செய்து மூலக்க
Metro


சென்னை, 19 மே (ஹி.ச.)

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-2 பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வழித்தடம்-3ல் பயன்படுத்தப்பட்டு வந்த ‘சேர்வராயன்’ என பெயரிடப்பட்ட சுரங்கத் தோண்டும் இயந்திரம் தனது பணியை வெற்றிகரமாக நிறைவு செய்து மூலக்கடை மெட்ரோ இரயில் நிலையத்தை வந்தடைந்தது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், கட்டம்-2 திட்டத்தின் கீழ் மொத்தம் 118.9 கிலோமீட்டர் நீளத்தில் 3 புதிய வழித்தடங்களை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில், மாதவரம் பால் பண்ணை முதல் கெல்லீஸ் வரையிலான முதல் 9 கிலோமீட்டர் நீள சுரங்கப்பாதை அமைக்கும் பணியை டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்தப் பணிக்காக 7 சுரங்கத் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றான ‘சேர்வராயன்’ இயந்திரம், மாதவரம் நெடுஞ்சாலை மெட்ரோ நிலையத்திலிருந்து மூலக்கடை மெட்ரோ நிலையம் வரையிலான கீழ்வழித்தடத்தில் (Down Line) சுரங்கம் அமைக்கும் பணியை மேற்கொண்டது.

மொத்தம் 824.6 மீட்டர் நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்து, இயந்திரம் மூலக்கடை நிலையத்தை வந்தடைந்துள்ளது. இது TU-01 ஒப்பந்தத்தின் கீழ் டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனத்தால் நிறைவு செய்யப்பட்ட ஒன்பதாவது சுரங்கத் தோண்டும் பணியாகும்.

இதன்மூலம், சென்னை மெட்ரோ கட்டம்-2 திட்டத்தில் இதுவரை 23 சுரங்கத் தோண்டும் இயந்திரங்கள் தங்களது பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளன.

மாதவரம் நெடுஞ்சாலை – மூலக்கடை இடையேயான சுரங்கப்பாதை பகுதி மிகவும் சவாலான பகுதியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘சேர்வராயன்’ இயந்திரம் பக்கிங்காம் கால்வாய்க்கு அடியிலும், கடும் போக்குவரத்து நெரிசல் நிலவும் சாலைகளுக்கு அடியிலும், 14-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகளைக் கடந்தும் சுரங்கப்பாதை அமைத்துள்ளது.

இந்தப் பணிகளின்போது பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் அல்லது தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்படாத வகையில் மாற்று குடிநீர் வசதிகள் செய்யப்பட்டதாகவும், முழுப் பணியும் அனுமதிக்கப்பட்ட குறைந்தபட்ச நில அதிர்வு அளவுகளுக்குள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்பட்டதாகவும் சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், பணிகள் நடைபெற்ற காலம் முழுவதும் நவீன கண்காணிப்பு கருவிகள் மூலம் தொடர்ச்சியான ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் மற்றும் பொது ஆலோசகர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நேரில் பார்வையிட்டனர்.

Hindusthan Samachar / P YUVARAJ