மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு - சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சென்னை, 19 மே (ஹி.ச.) கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி அன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டமிக்க பகுதியில் நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் கொல்லப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம், அஞ
Dr. Subbiah Murder Case


சென்னை, 19 மே (ஹி.ச.)

கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி அன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டமிக்க பகுதியில் நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் கொல்லப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள ரூபாய் 10 கோடி மதிப்பிலான 2.25 ஏக்கர் நிலம் தொடர்பான நிலத்தகராறில் நடந்த இந்த கொலை சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் கொலை சம்பவம் தொடர்பான காட்சிகள் பதிவாகியிருந்தது.

அதனை அடிப்படையாகக் கொண்டு விசாரித்த காவல்துறையினர், ஜேம்ஸ் சதீஷ்குமார், பொன்னுசாமி, மேரி புஷ்பம், போரிஸ், வில்லியம்ஸ், பேசில், யேசுராஜன், முருகன், ஐயப்பன், செல்வ பிரகாஷ் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்பு அவர்கள் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதனிடையே, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஐயப்பன் என்பவர் அப்ரூவர் ஆனார்.

அதைத் தொடர்ந்து, அவர் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து உறவினர்கள் 4 பேர், கூலிப்படையினர் 5 பேர் என மொத்தம் 9 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி அல்லி கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி (04.08.2021) தீர்ப்பளித்தார்.

அதன்படி, பொன்னுசாமி, பாசில், வில்லியம்ஸ், ஜேம்ஸ் சதீஷ்குமார், போரிஸ், முருகன், செல்ல பிரகாஷ் ஆகிய 7 பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், மேரி புஷ்பம், யேசுராஜன் ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்த தீர்ப்பிற்கு எதிராக தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேலும் மருத்துவர் சுப்பையாவின் குடும்பத்தினர் தரப்பும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீடு மனு கடந்த சில மாதங்களாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று

(19-05-26) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதில் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

இது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்ததாவது, விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது மிகப்பெரிய தவறு.

விசாரணை நீதிமன்ற தீர்ப்பை முறையாக ஆராயாமல் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அனைத்து குற்றவாளிகளும் உடனடியாக சரணடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b