சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பின் முதல் முறையாக கட்சி அலுவலகத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமி
சென்னை, 19 மே (ஹி.ச.) சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல் முறையாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு இன்று வந்தார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த அவருக்
இபிஎஸ்


சென்னை, 19 மே (ஹி.ச.)

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல் முறையாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு இன்று வந்தார்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த அவருக்கு, கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதிமுகவில் உள்கட்சி பூசல் நீடித்து வரும் சூழலில், எடப்பாடி பழனிசாமியின் இந்த நகர்வு அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறிப்பாக, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பினர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடர்பாகவும் பல்வேறு எதிர்பார்ப்புகள் உருவாகியிருந்தன.

முன்னதாக, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் நடைபெறும் என தகவல் வெளியானது.

ஆனால், திடீரென கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டதோடு, எடப்பாடி பழனிசாமியும் நேரடியாக தலைமை அலுவலகத்திற்கு வந்தது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைமை அலுவலகம் வந்த எடப்பாடி பழனிசாமியை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர்தூவி வரவேற்றனர்.

“அதிமுக வாழ்க”, “எடப்பாடியார் வாழ்க” என முழக்கங்கள் எழுப்பிய தொண்டர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள், அமைப்பு மாற்றங்கள் மற்றும் உள்கட்சி நிலவரம் குறித்து இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P