சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
சோழவந்தான் , 19 மே (ஹி.ச.) மதுரை மாவட்டம் சோழவந்தானில் பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி மாத பெருந்திருவிழா இன்று காலை வண்ணமயமான கொடியேற்றத்துடன் சம்பிரதாய முறைப்படி தொடங்கியது. வைகாசி திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 5.30 ம
Jenakai Mariamman Temple


சோழவந்தான் , 19 மே (ஹி.ச.)

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி மாத பெருந்திருவிழா இன்று காலை வண்ணமயமான கொடியேற்றத்துடன் சம்பிரதாய முறைப்படி தொடங்கியது.

வைகாசி திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 5.30 மணிக்கு கோவில் வளாகத்தில் அமைந்துள்ள 40 அடி உயர கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றினர்.

அம்மனின் உருவம் பொறிக்கப்பட்ட புனித கொடி ஏற்றப்பட்டதும், திரண்டிருந்த பக்தர்களின் ஓம் சக்தி கோஷம் விண்ணைப் பிளந்தது.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

திருவிழாவின் முதல் நாளான இன்று சோழவந்தான் மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். பெண்கள் பால்குடம், மாவிளக்கு எடுத்தும், ஆண்கள் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்வு நடைபெற உள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை அக்னிசட்டி எடுக்கும் நிகழ்வும், தேரோட்டமும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழா மஞ்சள் நீராட்டு மற்றும் கொடி இறக்கத்துடன் நிறைவடையும்.

ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா, அப்பகுதியின் மிகப்பெரிய விழாக்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b