Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 19 மே (ஹி.ச.)
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் யுனைடெட் இண்டஸ்ட்ரியல் பிளாஸ்டிக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் வேஸ்ட் ஆயில் டேங்கை சுத்தம் செய்ய சென்ற 4 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹூண்டாய் கார்கள் தயாரிப்பிற்கு தேவையான எஞ்சின் மோல்டிங் உள்ளிட்ட உதிரிபாகங்கள் தயாரிக்கும் வெண்டார் நிறுவனமாக இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று பணியில் இருந்த மணிகண்டன், மதன்ராஜ், விக்னேஷ் மற்றும் ஸ்ரீதர் ஆகிய நால்வரும் சுமார் 40 அடி ஆழமுள்ள வேஸ்ட் ஆயில் டேங்கை சுத்தம் செய்ய உள்ளே இறங்கியதாக கூறப்படுகிறது.
அப்போது நச்சு வாயு தாக்கம் காரணமாக நால்வரும் மயங்கிய நிலையில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை காப்பாற்ற மேலும் சில ஊழியர்கள் டேங்கிற்குள் இறங்கிய நிலையில், பின்னர் அனைவரும் மீட்கப்பட்டனர்.
மயங்கிய நிலையில் இருந்த 4 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து மூச்சுத்திணறல் அதிகமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் மணிகண்டன் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என கூறப்படுகிறது.
இந்த விபத்துக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததே காரணம் என சக தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டை பகுதிகளில் பணியாற்றும் தனியார் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam