வீட்டு வரி ரசீது கேட்ட பெண்ணின் வாயில் டேப் ஒட்டிய ஊராட்சி செயலாளர் -குளித்தலையில் பரபரப்பு
கரூர், 19 மே (ஹி.ச.) கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள சிந்தலவாடி ஊராட்சியில் வீட்டு வரி ரசீது கேட்ட பெண்ணை ஊராட்சி செயலாளர் அவமரியாதையாக நடத்தி, வாயில் டேப் ஒட்டி அனுப்பியதாக கூறப்படும் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய
கிராம நிர்வாக அலுவலகம்


கரூர், 19 மே (ஹி.ச.)

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள சிந்தலவாடி ஊராட்சியில் வீட்டு வரி ரசீது கேட்ட பெண்ணை ஊராட்சி செயலாளர் அவமரியாதையாக நடத்தி, வாயில் டேப் ஒட்டி அனுப்பியதாக கூறப்படும் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கீழ் சிந்தலவாடி பகுதியை சேர்ந்த அன்னக்கிளி (45) என்பவர் தனது தாயார் பெயரில் இருந்த வீட்டை தொடர்ந்து பராமரித்து வருகிறார்.

கடந்த 2017 முதல் 2025 ஆம் ஆண்டு வரை வீட்டு வரி ரசீது அவரது பெயரில் வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான வீட்டு வரி ரசீது பெறுவதற்காக அவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சிந்தலவாடி ஊராட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது தேர்தல் பணிகள் நடைபெற்று வருவதால் பின்னர் வருமாறு ஊராட்சி செயலாளர் ரவி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தேர்தல் முடிந்த பின்னரும் பலமுறை அலுவலகத்திற்கு சென்ற அன்னக்கிளிக்கு, “நாளை வா” என கூறி தொடர்ந்து அலைக்கழித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் ரசீது கேட்டு சென்ற போது, “அடிக்கடி வந்து தொந்தரவு செய்கிறாய்” என கூறி, அவரது வாயில் டேப் ஒட்டி, “எங்கு வேண்டுமானாலும் புகார் செய்; யாராலும் என்னை எதுவும் செய்ய முடியாது” என மிரட்டியதாக அன்னக்கிளி புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் லாலாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை விசாரித்த போலீசார், ஊராட்சி செயலாளர் ரவியை எச்சரித்து, வீட்டு வரி ரசீது வழங்க அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால் மறுநாள் மீண்டும் அலுவலகத்திற்கு சென்ற அன்னக்கிளியை, “என் மீது புகார் கொடுத்துவிட்டு இங்கு எதற்காக வந்தாய்?” என்று கூறி, அலுவலகத்திற்குள் வரக்கூடாது என வெளியே தள்ளியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் புகார்களை ஊராட்சி செயலாளர் ரவி ஒருமையில் பேசி அலட்சியமாக நடத்தி வருவதாகவும், அதிகார திமிருடன் செயல்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இது குறித்து அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றபோதும் பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

எனவே, சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, ஊராட்சி செயலாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்மணியும், சிந்தலவாடி பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam