கிளாம்பாக்கத்தில் பயணியை தாக்கிய ஆம்னி பேருந்து ஊழியர் - போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லை என பயணிகள் குற்றச்சாட்டு
சென்னை, 19 மே (ஹி.ச.) சென்னை வண்டலூர் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் நள்ளிரவு நேரத்தில் பயணியும் ஆம்னி பேருந்து ஓட்டுநரும் நடைமேடையில் ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்ட அதிர்ச்சி வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெ
கிளாம்பாக்கம்


சென்னை, 19 மே (ஹி.ச.)

சென்னை வண்டலூர் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் நள்ளிரவு நேரத்தில் பயணியும் ஆம்னி பேருந்து ஓட்டுநரும் நடைமேடையில் ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்ட அதிர்ச்சி வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் தென் மாவட்டங்களுக்கும் செல்லக்கூடிய பொதுமக்கள் தினசரி ஆயிரக்கணக்கில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் மூலம் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்களிலும் இரவு நேரங்களிலும் இங்கு பயணிகளின் கூட்டம் அலைமோதும்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக பயணி ஒருவர் கிளாம்பாக்கம் ஆம்னி பேருந்து நிலையப் பகுதிக்கு வந்துள்ளார் அங்கு நின்றிருந்த ஒரு ஆம்னி பேருந்தில் ஏறுவதற்காக, அதன் ஓட்டுநரிடம் பயணச் டிக்கெட்டின் விலை எவ்வளவு என்று கேட்டுள்ளார் அதற்கு அந்த ஓட்டுநர் வழக்கமான கட்டணத்தை விட மிக அதிக தொகையைக் சொல்லியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பயணி சாதாரண நாட்களிலேயே ஏன் இவ்வளவு அதிக கட்டணம் கேட்கிறீர்கள்? என்று ஓட்டுநரிடம் நியாயம் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் வாய் தகராறாகத் தொடங்கிய இந்த விவாதம் அடுத்த சில நிமிடங்களில் எல்லை மீறி கைகலப்பாக மாறியது ஆத்திரமடைந்த ஆம்னி பேருந்து ஓட்டுநரும் அந்தப் பயணியும் பொது மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நடைமேடையிலேயே ஒருவரையொருவர் சட்டைப் பிடித்துக் கொண்டு பயங்கரமாகத் தாக்கத் தொடங்கினர்.

அங்கிருந்த சக பயணிகளும் மற்ற பேருந்து ஊழியர்களும் அவர்களை விலக்கிவிட முயன்றனர் எனினும், இருவரும் மாறி மாறி சரமாரியாக ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர் இந்த சம்பவத்தை அங்கிருந்த பயணி ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார் தற்போது அந்த அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்றாகக் கருதப்படும் கிளாம்பாக்கத்தில், நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் போதிய அளவு காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதில்லை. இதனால் தான் இதுபோன்ற சமூக விரோதச் செயல்களும் மோதல்களும் தடையின்றி நடப்பதாக பொதுமக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்

குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் நள்ளிரவில் பயணம் செய்ய வரும் பயணிகள் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களால் தங்களின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அச்சம் தெரிவிக்கின்றனர்.

மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுவதும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீஸ் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam