Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 மே (ஹி.ச)
சென்னை கோடம்பாக்கம் புலியூர் புரம் மெயின் ரோட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை எண் 504-ஐ அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் இன்று திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெண்கள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக டாஸ்மாக் கடை செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினர். மேலும், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகிலேயே கடை இயங்குவதால் உடனடியாக அதை அகற்ற வேண்டும் என்று கோஷமிட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டாஸ்மாக் நிர்வாகத்தை சேர்ந்த தாசில்தார் ராஜசேகர், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், கடையை உடனடியாக மூட வேண்டும் என்றும், அதிகாரப்பூர்வ உத்தரவு வரும் வரை கடையை திறக்க அனுமதிக்கக் கூடாது என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியதால் போராட்டம் தொடர்ந்தது.
இதையடுத்து, ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சபாநாயகருமான ஜேசிடி பிரபாகர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த அவர், ஏழு நாட்களுக்குள் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ