Enter your Email Address to subscribe to our newsletters

பட்டுக்கோட்டை, 19 மே (ஹி.ச)
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் இங்கு லேத் பட்டறை நடத்தி வந்தார். தொழில் தேவைக்காக கந்து வட்டிக்கு ரூ.2 லட்சம் கடன் வாங்கியுள்ளார். ஆனால், கடன் கொடுத்த கும்பல் வட்டியுடன் சேர்த்து ரூ.10 லட்சம் தருமாறு தொடர்ந்து மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.
கடும் மன உளைச்சலுக்கு ஆளான சரவணன், கந்து வட்டி கும்பலின் தொடர் மிரட்டலை தாங்க முடியாமல் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, சரவணனின் மரணத்திற்கு காரணமான கந்து வட்டி கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை உடலை வாங்க மறுத்து மறியல் செய்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். கந்து வட்டி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதியளித்ததை அடுத்து, உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
தமிழகத்தில் கந்து வட்டி கொடுமையால் தொடரும் தற்கொலைகள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. அரசு கந்து வட்டி தடுப்புச் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பட்டுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b