Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 மே (ஹி.ச)
சென்னை ராயப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் டயர் குடோன் ஒன்றில் நேற்று நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
குடோனில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பி தீ மளமளவென பரவியதால் அப்பகுதி முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், 4 வாகனங்களில் வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர்.
டயர்கள் எளிதில் தீப்பற்றும் தன்மை கொண்டவை என்பதால் தீயை கட்டுப்படுத்துவதில் வீரர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், குடோனில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான டயர்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. அருகில் இருந்த கட்டிடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. மின்கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து ராயப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.
நள்ளிரவில் ஏற்பட்ட இந்த தீ விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b