மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடைகள் திடீர் அடைப்பு - ஊழியர்கள் போராட்டம்
மயிலாடுதுறை, 19 மே (ஹி.ச.) மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை கண்டித்து, டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் மாவட்டம் முழுவதும் 43 டாஸ்
டாஸ்மாக்


மயிலாடுதுறை, 19 மே (ஹி.ச.)

மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை கண்டித்து, டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் மாவட்டம் முழுவதும் 43 டாஸ்மாக் கடைகளும் திறக்கப்படாமல் இருந்தன.

தமிழக அரசு டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், சமூக வலைதளங்களிலும் பல்வேறு வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் கூடுதல் தொகை வசூலித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கடை மேற்பார்வையாளர் காமராஜ் மற்றும் விற்பனையாளர் பாபு மீது சீர்காழி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த டாஸ்மாக் ஊழியர்கள், துறை ரீதியான விசாரணைக்கு முன்பே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தது கண்டனத்திற்குரியது என குற்றம்சாட்டி, மாவட்டம் முழுவதும் கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, நூற்றுக்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து, ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், அதிக விற்பனை நடைபெறும் கடைகளுக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும், கடை வாடகைக்கு போதுமான தொகையை நிர்வாகம் வழங்க வேண்டும், காலி பாட்டில்களை திரும்ப பெற தனி பணியாளர்களை நியமிக்க வேண்டும், மதுபான பெட்டிகளுக்கான இறக்குகூலியை உயர்த்த வேண்டும், உடையும் பாட்டில்களுக்கான இழப்பீட்டை நிர்வாகமே ஏற்க வேண்டும், டாஸ்மாக் கடைகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

மேலும், ஊழியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்றும், துறை ரீதியான நடவடிக்கைக்கு முன்பாக குற்றவியல் வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போராட்டம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகளும் இன்று திறக்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / GOKILA arumugam