Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 19 மே (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம் மானூர் போலீசார் இரவு நெல்லை - சங்கரன்கோவில் சாலையில் உள்ள ராமையன்பட்டி புறக்காவல் நிலையம் அருகேயுள்ள வாகன சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், புறக்காவல் நிலையத்தை ஒட்டி, பெட்ரோல் குண்டு ஒன்றை வீசி விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
அந்த கும்பல் மாநகர பகுதியை நோக்கி சென்றதால் உடனடியாக தச்சநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மாநாகரின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து போலீசாரின் விசாரணையில் புறக்காவல் நிலையம் அருகே பெட்ரோல் குண்டை வீசியது ராமையன்பட்டி மற்றும் கண்டியபேரி பகுதிகளைச் சேர்ந்த 17 வயதான 3 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இந்நிலையில் அந்த மூன்று பேரும் இன்று காலை தச்சநல்லூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இது குறித்து மானூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், 3 பேரையும் மானூர் போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அதில், நேற்று (மே 18) பகல் நேரத்தில் இந்த 3 இளைஞர்களும் ஒரே மோட்டார் சைக்கிளில் ராமையன்பட்டி சோதனைச் சாவடி வழியாக வந்துள்ளனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மானூர் போலீஸ் துணை காவல் ஆய்வாளர் சஜி தலைமையிலான போலீசார், சிறுவர்கள் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி ஆவணங்களை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர். அவர்களிடம் லைசன்ஸோ ஆவணங்களோ எதுவும் இல்லை என்பது தெரிய வரவே, சாவியை எடுத்து வைத்துக் கொண்டு, வீட்டிலிருந்து பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளனர்
ஆனால் அந்த சிறுவர்கள் போலீசாருக்கு தெரியாமல் தங்களது மோட்டார் சைக்கிளை உருட்டிக் கொண்டே தங்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டனர். பின்னர் போலீசார் தங்களை நிறுத்திய ஆத்திரத்தில், அந்த சிறுவர்கள் 3 பேரும் மதுபோதையில் பெட்ரோல் குண்டை வீசியது விசாரணையில் தெரிய வந்தது.
ஆத்திரத்தில் சிறுவர்கள் காவல் நிலையத்தின் மீதே பெட்ரோல் குண்டை வீசிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN