Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 மே (ஹி.ச.)
மும்பை - அகமதாபாத் இடையே அமையவுள்ள இந்தியாவின் முதல் புல்லட் ரயிலின் அதிகாரப்பூர்வ மாதிரி வடிவத்தை (Design) ஒன்றிய ரயில்வே அமைச்சகம் டெல்லியில் வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான 1389.5 ஹெக்டேர் நிலமும் முழுமையாகக் கையகப்படுத்தப்பட்டு, குஜராத்தில் 8 நிலையங்களின் உள்கட்டமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும், கன்சோலி - ஷில்பாட்டா இடையே கடலுக்கடியில் 4.8 கி.மீ நீள சுரங்கப்பாதை மற்றும் 17 நதிப் பாலங்களின் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
இது குறித்து பெருமிதம் தெரிவித்துள்ள தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் இன்று எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
பிரதமர் மோடி அவர்களின் கனவான வளர்ச்சி அடைந்த பாரதத்தினை எட்டும் மைல்கல்லாக இந்தியாவின் முதல் புல்லட் ரயிலின் மாதிரி புகைப்படம் ரயில்வே அமைச்சகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
ரயில்வே துறையை நவீனமயமாக்கும் முயற்சியின் விளைவாக வந்தே பாரத், அம்ரித் பாரத் ரயில்களின் வரிசையில் அடுத்த வருடம் முதல் சீறிப்பாய உள்ளது இந்த புல்லட் ரயில்.
மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் மும்பை - அகமதாபாத் இடையே 508 கிலோமீட்டர் தூரத்தினை இந்த புல்லட் ரயில் வெறும் 2 மணி 10 நிமிடங்களில் கடக்க உள்ளது ரயில்வே துறை இமாலய சாதனையாகும்.
இதற்கான பெருமுயற்சிகளை மேற்கொண்டு இந்திய ரயில்வே துறையை உலகத்தரத்தில் உயர்த்தி வரும் ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும், ரயில்வே அமைச்சகத்திற்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b