Enter your Email Address to subscribe to our newsletters

மயிலாடுதுறை, 19 மே (ஹி.ச.)
தமிழகத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்கும் விவகாரம் நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் விஜய், 'பாட்டிலுக்கு பத்து ரூபாய்' என்று பாடி பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், டாஸ்மாக் மதுபான கடைகளில் தொடர்ந்து பத்து ரூபாய் வசூலிப்பதாக புகார் எழுந்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரத்தில் அமைந்துள்ள மதுபான கடை ஒன்றில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில், அந்த கடை மேற்பார்வையாளர் காமராஜ் மற்றும் விற்பனையாளர் பாபு ஆகிய இருவர் மீது சீர்காழி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், அவர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மயிலாடுதுறை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் இன்று திடீரென கடை அடைப்பு செய்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள 43 அரசு டாஸ்மாக் மதுபான கடைகளும் திறக்கப்படவில்லை.
தொடர்ந்து இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் டாஸ்மாக் ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து வந்து மனு அளித்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN