Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 மே (ஹி.ச.)
பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் சரியான எடையில் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் தமிழகம் முழுவதும் செயல்படும் நியாய விலைக் கடைகளில் உணவுத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ஒவ்வொரு நியாய விலைக் கடையிலும் பயன்படுத்தப்படும் மின்னணு தராசுகள் முறையாக வேலை செய்கின்றனவா என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
குறிப்பாக, பொருட்களின் எடையை வாங்கும் பொதுமக்கள் நேரடியாகப் பார்க்கும் வகையில் தராசின் இருபுறமும் உள்ள டிஸ்ப்ளே செயல்படுகிறதா என்பதை கடை பணியாளர்கள் தினமும் சரிபார்க்க வேண்டும் என கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிஸ்ப்ளே பழுதாகியிருந்தால் உடனடியாக சரி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நியாய விலைக் கடைகளில் எடை குறைவு, தரமற்ற பொருட்கள் விநியோகம், பில் முறைகேடு போன்ற தவறுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடை பணியாளர்கள் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை எச்சரித்துள்ளது.
பணியாளர்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் தங்கள் கடமையை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் முக்கிய நோக்கம், பொதுவிநியோகத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதும், பொதுமக்களுக்கு முழு அளவில் பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்வதும் ஆகும்.
எனவே, பொருட்கள் வாங்கும் போது எடையை தராசின் டிஸ்ப்ளேவில் சரிபார்த்து வாங்குமாறும், ஏதேனும் முறைகேடு தெரிந்தால் உடனடியாக 1967 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் அளிக்குமாறும் உணவுத்துறை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
மாநிலம் முழுவதும் இந்த திடீர் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் எனவும், முறைகேடுகளுக்கு இடமளிக்காத வகையில் நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b