அதிகாரிகளை வீட்டுக்கு அழைத்து ஆலோசனை மேற்கொண்ட தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ்!
கோவை, 19 மே (ஹி.ச) கோவை கவுண்டம்பாளையம் தவெக சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி, அதிகாரிகளை தனது வீட்டிற்கு வரவழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகளுடன் களத்திற்கு சென்று ஆய்வு செய்ய வேண்டிய மக்கள் பிரதிநிதி, அவர்களை வ
Kanimozhi Santhosh


கோவை, 19 மே (ஹி.ச)

கோவை கவுண்டம்பாளையம் தவெக சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி, அதிகாரிகளை தனது வீட்டிற்கு வரவழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரிகளுடன் களத்திற்கு சென்று ஆய்வு செய்ய வேண்டிய மக்கள் பிரதிநிதி, அவர்களை வீட்டிற்கு அழைத்து ஆலோசனை செய்வது குறித்து சொந்த கட்சியினரே விமர்சனம் செய்து வருகின்றனர்.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட கனிமொழி சந்தோஷ், அதிமுக வேட்பாளர் பி.ஆர். ஜி.அருண்குமாரை வீழ்த்தி (சுமார் 42,000 வாக்குகள் வித்தியாசத்தில்) முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கோவையில் மொத்தம் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 6 தொகுதிகளை தவெக கைப்பற்றியது. சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்ற பின், அவரவர் சொந்த தொகுதிக்கு வந்து பணிகளை துவக்கி உள்ளனர்.

இந்நிலையில் கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ், துடியலூர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் காய்கறி சந்தையில் இன்று ஆய்வு மேற்கொண்டார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக அவர்கள் தெரிவித்ததை தொடர்ந்து அதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் துடியலூர் காய்கறி சந்தையில் வியாபாரிகளின் தேவை குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இங்கு தெருநாய்க்கடிக்கு மருந்துகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். அவை விரைவில் சரி செய்யப்படும். தெருநாய்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பிஏ, பிஎல். படித்த கனிமொழி, பிரமாண பத்திரத்திலும், பெயருக்கு முன்னாலும் டாக்டர் என குறிப்பிடுவது தொடர்பான கேள்விக்கு, நான் சட்டப் படிப்பு முடித்துள்ளேன். அடிப்படையில் நான் ஒரு வழக்கறிஞர். எனக்கு ஜோதிடத்தில் ஆர்வம் அதிகம் என்பதால் அதில் டாக்டரேட் முடித்துள்ளேன்.

மருத்துவம் படித்தவராக இருந்தாலும், டாக்டரேட் பட்டம் பெற்றவராக இருந்தாலும் டாக்டர் என்று தான் பொதுவாக குறிப்பிடுவார்கள். அப்படி இருக்கும் போது டாக்டர் என்பது என் புனைபெயராக மாறி விட்டது.

என் வலைத்தள வீடியோக்கள் அனைத்தும் உடல்நலம் சார்ந்து அதிகமாக இருப்பதால் நான் டாக்டருக்கு படித்து விட்டு இவ்வாறு சர்ச்சையாக பேசுகிறேன் என்று புரிந்து கொண்டு விட்டார்கள் என்று பதில் அளித்தார்.

முன்னதாக, கனிமொழி சந்தோஷ் அதிகாரிகளை தனது வீட்டிற்கு வரவழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். அந்த கூட்டம் நடத்தியது தொடர்பான புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். அவரது செயலைக் கண்டு, சொந்த கட்சியினரே அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN